January 3, 2021
தண்டோரா குழு
எவரெஸ்ட் குழுமத்தின் சேர்மனான எவரெஸ்ட் சோமுவின் நூற்றாண்டு இந்த ஆண்டு இன்று கொண்டாடப்பட்டது. இதனை கொண்டாடும் விதமாக அவரது குடும்பத்தினர் இன்று கோவையில் தனியார் ஹோட்டலில் விழா நடத்தினர். விழாவில் Dr. மேகலா சேகர் வரவேற்புரையாற்றினார். பின்னர் எவரெஸ்டில் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களின் படங்கள் LED திரையில் காண்பிக்கப்பட்டன.
முக்கிய நிகழ்வாக “கோவையின் இரும்பு மனிதர்” (The Iron Man of Coimbatore) எவரெஸ்ட் A. சோமசுந்தரம் என்ற நூலினை விழாக்குழுவின் தலைவர் பிரம்மச்சாரி விக்னேஷ் சைத்தன்யா ஜி (சின்மயா மிஷன், கோவை) வெளியிட, கொடிசியாவின் முன்னாள் தலைவராக விளங்கிய M. கந்தசாமி, விருந்தினர்களும் நூலினைப் பெற்றுக் கொண்டனர். பின்னர் விழாக்குழுவின் தலைவருக்கும், சிறப்பு விருந்தினர்களுக்கும், வருகை புரிந்த எவரெஸ்ட் கம்பெனியின் அலுவலர்களுக்கும் எவரெஸ்ட் குடும்பத்தினர் சிறப்பு செய்தனர்.
விழாத் தலைவர் தமது உரையில்,
எவரெஸ்ட் சோமுவின் செயல்களை விளக்கியும் கர்மாவைக் குறித்தும் பேசினார். அதனைத் தொடர்ந்து Sri. P. A. ராஜு செட்டியார் சன் ஜுவல்லர்ஸின் உரிமையாளர் ஸ்ரீ. ராஜேஷ் கோவிந்த ராஜுலு, கொடிசியாவின் முன்னாள் தலைவர் ஸ்ரீ M. கந்தசாமி, பி.எஸ்.ஜி. தொழில்நுட்பக் கல்லூரியில் இயந்திரவியல் துறையின் தலைவராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற பேராசியரியர் Dr. V. இராமச்சந்திரன், பாரதியார் பல்கலைக்கழகத்தின் சுற்றுச் சூழலியல் துறையின் முன்னாள் தலைவராகவும், பின்னர் கற்பகம் பல்கலைக்கழகத்தின் பதிவாளருமாகப் பணியாற்றி ஓய்வு பெற்ற Dr. P. லஷ்மண பெருமாள் சாமி , MSME-யின் இரண்டாம் நிலை துணை இயக்குநராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற M. மயில்சாமி, S. M. சதாசிவம் (பிரிமியர் பிளேட் ஃபேபிரிகேஷன், நிர்வாக இயக்குனர்) , எவரெஸ்ட் சோமுவின் PA-வாகப் பணியாற்றிய K. அண்ணாமலை எவரெஸ்ட் சோமுவின் கடின உழைப்பு குறித்தும், நேரம் தவறாமை குறித்தும், தரத்துடன் தந்தமை குறித்தும், அவர் பெற்ற பதக்கங்கள், பாராட்டுக்கள் குறித்தும், எவரெஸ்டில் பணியாற்றிய போது தாங்கள் அவரிடம் பெற்ற அனுபவங்கள் குறித்தும் மிகவும் சிறப்பாக எடுத்துரைத்தார்கள்.
இதனைத் தொடர்ந்து “உழைப்பு” என்ற தலைப்பில் உழைப்பினால் கிட்டும் உயர்வு குறித்தும், மேன்மை குறித்தும், சிறப்பு குறித்தும், பலரது கதைகளின் வாயிலாக அனைவரையும் கவரும் வகையில் தனது உரையை நிகழ்த்தினார் சிறப்பு விருந்தினராக வருகை புரிந்த N. செல்வராஜ். வருகை புரிந்த அனைவருக்கும் எவரெஸ்ட் A. சோமசுந்தரத்தின் பேத்தி M. லஷ்மிதா நன்றி தெரிவித்தார்.இதில் பல தொழில் நுட்பக் கல்லூரிகளில் இருந்து வருகை புரிந்த மாணவர்கள் பங்கு பெற்றுப் பயன் பெற்றனர்.