June 14, 2018
தண்டோரா குழு
கோவையில் நேற்று இரவு முதல் தற்போது வரை தொடர்ந்து மழை பெய்து வருவதால் நொய்யல் ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடிகிறது.வெள்ளப்பெருக்கின் காரணமாக கோவை குற்றாலம் அருவியில் குளிக்க ஐந்தாவது நாளாக தடை விதித்து வனத்துறை உத்தரவிட்டுள்ளது.
தென் மேற்கு பருவமழை தொடங்கியது முதலே கோவை மாவட்டத்தில் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது.இந்நிலையில் நேற்று மாலை தொடர்ந்த மழை விடிய விடிய பெய்து வருகிறது.காலையிலும் விட்டு விட்டு கோவை மாநகரப் பகுதிகளிலும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது.தொடர் மழையின் காரணமாக நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
மேலும்,கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளதன் காரணமாக ஐந்தாவது நாளாக அருவிக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதித்து வனத்துறை உத்தரவிட்டுள்ளது. சிறுவாணி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையின் காரணமாக ஒரே நாளில் நீர்மட்டம் பத்து அடி உயர்ந்துள்ளது.மொத்த உயரமான 50 அடியில்,தற்போது 40 அடிக்கு நீர் இருப்பு உள்ளது. இதனால் அணை விரைவில் நிரம்பி வழிய வாய்ப்பு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.