December 20, 2025
தண்டோரா குழு
உலகின் முன்னணி ஏர் கம்ரஸர்கள் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான எல்ஜி எக்யூப்மென்ட்ஸ் லிமிடெட் கோயம்புத்தூர் மாரத்தான் உடனான தனது 13 ஆண்டுகால உறவை பெருமையுடன் கொண்டாடுகிறது.
கோயம்புத்தூர் மாரத்தான் நிகழ்ச்சிக்கு ‘பவர்டு பை'(PoweredBy) எனும் பெரும் நிதி ஆதரவு வழங்கும் ‘ஸ்பான்சராக இந்த நிறுவனம் இருந்து வருகிறது. மேலும் இம்முறை இந்த நிகழ்வில் பங்கேற்கும் 25,000-க்கும் அதிகமான பங்கேற்பாளர்களில் 1,725-க்கும் மேற்பட்டவர்கள் எல்ஜி ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.
மாரத்தான் உடனான எல்ஜி எக்யூப்மென்ட்ஸின் உறவை பற்றி அந்நிறுவனத்தின் தலைமை இயக்க அதிகாரி அன்வர் ஜெய் வரதராஜ் பேசுகையில்,
“கோயம்புத்தூர் மாரத்தான் நிகழ்விற்கு தொடர்ந்து 13-வது ஆண்டாக எங்களுடைய பங்களிப்பை வழங்குவதில் மகிழ்ச்சி. சமூகத்திற்கு மிகவும் உதவக்கூடிய முக்கியமான ஒரு நோக்கத்திற்காக கோயம்புத்தூர் கேன்சர் பவுண்டேஷன் உடன் மீண்டும் இணைவதிலும் எல்ஜி பெருமிதம் கொள்கிறது.
இந்த ஆண்டு 1,725-க்கும் மேற்பட்ட எல்ஜி ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் இதில் பங்கேற்பது, புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை பரப்புவதிலும், அதற்கான பராமரிப்பு திட்டங்களுக்கு ஆதரவளிப்பதிலும் எங்களுக்கு உள்ள கூட்டுப் பொறுப்பை பிரதிபலிக்கிறது.
இந்த மாரத்தான் நிகழ்வு உடல்நலம், நல்வாழ்வு மற்றும் சமூகப் பொறுப்புணர்வு ஆகியவற்றை ஒன்றிணைக்கும் ஒரு வலிமையான சக்தியாக மாறியுள்ளதாக நாங்கள் உறுதியாக நம்புகிறோம். இதில் பங்கேற்கும் அனைவருக்கும் எங்களது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். இந்த முயற்சியின் மூலம் கோயம்புத்தூர் கேன்சர் பவுண்டேஷன் வழங்கும் சிகிச்சை, மறுவாழ்வு மற்றும் நோய்த்தணிப்பு பராமரிப்பு சேவைகளுக்கு பங்களிப்பதில் நாங்கள் தொடர்ந்து பெருமை கொள்கிறோம்”
இவ்வாறு அவர் கூறினார்.
எல்ஜி பிஸ்னஸ் சிஸ்டம் – எல்ஜி எக்யூப்மென்ட்ஸ் நிறுவனத்தின் செயல்பாடு பிரிவு நிர்வாக தலைவர் மற்றும் கோயம்புத்தூர் மாரத்தான் நிகழ்வின் ரேஸ் இயக்குனர் ரமேஷ் பொன்னுசாமி பேசுகையில் : –
“எல்ஜி நிறுவனத்தைப் பொறுத்தவரை, சிறந்த செயல்முறை என்பது வலுவான அமைப்புகள், ஒழுக்கமான செயல்பாடுகள் மற்றும் மக்கள் மீதான ஆழ்ந்த அர்ப்பணிப்பு ஆகியவற்றால் கட்டமைக்கப்படுவதாக நாங்கள் நம்புகிறோம். இந்த கொள்கைகளே கோயம்புத்தூர் மாரத்தானை திட்டமிடுவதிலும் மற்றும் நடத்துவதிலும் எங்களை வழிநடத்துகின்றன.
இந்த ஆண்டு ‘Let’s Ko Kovai!’ என்ற உண்மையான உத்வேகத்துடன் 25,000-க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள் மற்றும் 1,500-க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் ஒன்றிணைந்திருப்பது எங்களை நெகிழ்ச்சியடையச் செய்கிறது. மாரத்தான் தினத்தைத் தாண்டி, தொழில்நுட்பம், சிறந்த நடைமுறைகள் மற்றும் எங்கள் குழுக்களின் கூட்டுத் திறனைப் பயன்படுத்தி, பாதுகாப்பான, நேர்த்தியான மற்றும் சிறந்த அனுபவத்தைப் பங்கேற்பாளர்களுக்கு வழங்குவதே எங்களது நோக்கம். டிசம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை அன்று தொடக்கக் கோட்டில் அனைவரையும் வரவேற்பதற்கும், இந்த மாரத்தானையும் கடந்து அவர்களது உடல்நலம் மற்றும் நல்வாழ்வு பயணத்திற்கு ஆதரவளிப்பதற்கும் நாங்கள் ஆவலுடன் காத்திருக்கிறோம்.”
இவ்வாறு அவர் கூறினார்.