• Download mobile app
19 May 2024, SundayEdition - 3021
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

‘கோயமுத்தூர் விழா’ – 14 வது பதிப்பு கோலாகல துவக்கம் !

December 2, 2021 தண்டோரா குழு

கோயமுத்தூர் விழா 2022 நிகழ்ச்சியின் போஸ்டர் மற்றும் சின்னத்தை மாவட்ட ஆட்சியர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன் மற்றும் கோவை மாநகராட்சி ஆணையர் ராஜகோபால் சுங்கரா ஆகியோர் வெளியிட்டனர்.

கோவையின் பாரம்பரியத்தை பறைசாற்றும் விதமாகவும், கோவை மக்களிடையே, மாவட்டத்தின் பெருமைகளை, கலாச்சார நிகழ்வுகளை எடுத்துக்காட்டும் விதமாகவும், கடந்த 2009ம் ஆண்டு முதல் கோயம்புத்தூர் விழா என்ற நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. ஜனவரி முதல் வாரத்தில் துவங்கி நடைபெறும் இந்நிகழ்வின் போது, பல்வேறு விதமான நிகழ்ச்சிகள் நாள் தோறும் நடத்தப்படுவது வழக்கம். 2020ம் ஆண்டு மிகச்சிறப்பாக இந்நிகழ்ச்சி நடத்தப்பட்ட நிலையில் 2021ம் ஆண்டில் கொரோனா பெருந்தொற்று காரணமாக இந்நிகழ்ச்சி வர்ச்சுவல் எனப்படும் மெய்நிகர் நிகழ்ச்சியாக மட்டுமே நடத்தப்பட்டது.

இந்நிலையில் தற்போது கொரோனா தொற்று கட்டுக்குள் இருப்பதால், இவ்வாண்டு சமூக இடைவெளியை கடைபிடிப்பதோடு, சிறப்பான முறையில் கொண்டாட விழாக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். இதன்படி 14வது ஆண்டாக நடைபெறும் இவ்விழாவை ஒட்டி வருகிற ஜனவரி 2ம் தேதி முதல் ஜனவரி 9ம் தேதி வரை பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் அரங்குகளிலும், பொது இடங்களில் இந்நிகழ்வுகள் நடத்தப்பட்ட நிலையில், இவ்வாண்டு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் செம்மைப்படுத்தப்பட்டுள்ள குளக்கரைகளில் இந்நிகழ்சிகள் நடத்தப்பட உள்ளது. கலை, கல்வி, தொழில், விளையாட்டு, பொழுதுபோக்கு, வணிகம் மற்றும் விருந்தோம்பல் போன்ற நிகழ்வுகள் இந்நிகழ்வில் இருக்கும் என விழாக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இதையொட்டி இவ்விழாவிற்கான முன்னோட்ட நிகழ்ச்சி, கோவை வாலாங்குளம் குளக்கரை பூங்காவில் நடைபெற்றது. இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன், மாநகராட்சி ஆணையாளர் ராஜகோபால் சுங்கரா உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டு, விழாவிற்கான மேஸ்காட் எனப்படும் சின்னத்தை அறிமுகப்படுத்தினர். சிக்கூ என பெயரிடப்பட்டுள்ள இந்த சின்னம், தமிழ்நாடு மாநில பறவையான மரகதப்புறாவை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது.

முன்னதாக நிகழ்ச்சியில் பேசிய மாநகராட்சி ஆணையாளர் ராஜகோபால் சுங்கரா,

இது போன்ற விழாக்கள், பெருநகரங்களின் அடையாளமாக மாறும் எனவும், இதன் மூலம் அந்நகரம் குறித்த பெருமைகள் உலகம் முழுவதும் கொண்டு செல்ல வாய்ப்பளிக்கும் எனவும் தெரிவித்தார்.

மாவட்ட ஆட்சியர் சமீரன் பேசும் போது,

அரசு நடத்தும் விழாக்களைக் காட்டிலும், நகரின் தொழில்துறையினர், மக்களை இணைத்து நடத்தப்படும் இந்நிகழ்வுகள், பெரும் உற்சாகத்தை அளிப்பதாக தெரிவித்தார்.

கோயம்புத்தூர் விழாவின் ஒரு பகுதியாக மின்சார வாகனங்களின் கண்காட்சி, உலகத்தரம் வாய்ந்த வண்ணஒளி காட்சிகள், சாலைகளில் வண்ணம் பூசுதல், சமையல் போட்டிகள், மாரத்தான் போட்டி, சைக்கிள் போட்டி ஆகியவை நடைபெற உள்ளது. இவ்வாண்டு முதல் முறையாக மாற்றுத்திறனாளிகளும் பங்கு பெறும் பாராலிம்பிக்ஸ் போட்டிகள், விவசாய கண்காட்சி, கல்லூரி மாணவர்களின் இசை நிகழ்ச்சிகள் ஆகியவையும் இடம்பெற உள்ளது. மேலும் புதிய தொழில் முனைவோரை ஊக்கப்படுத்த சிறப்பு தொழில் நிகழ்ச்சி உள்ளிட்ட 120 வகையான நிகழ்ச்சிகளுக்கு திட்டமிடப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் கோயமுத்தூர் விழா தலைவர் அஷ்வின் மனோகர், இணை தலைவர் டாக்டர் செந்தில் குமார், சுமித் பிரசாத் மற்றும் யங் இந்தியன்ஸ் மற்றும் அமைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க