July 21, 2021
தண்டோரா குழு
கோவையில் கொரோனா விதிமுறைகளை மீறியதாக இரண்டு கடைகளுக்கு சீல் வைத்து மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
கோவையில் காய்கறி, மளிகை, நடைபாதையில் பூ, பழம் விற்பனை செய்யும் கடைகள், இறைச்சி, மீன் கடைகள் காலை 6b மணி முதல் மாலை 9 மணி வரை செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதன்படி பல்வேறு கடைகள் தினந்தோறும் செயல்பட்டு வருகின்றன.
இதுதவிர எலக்ட்ரானிக்ஸ் கடைகள், ஷோரூம்கள் உள்பட சில கடைகள் காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை மட்டுமே திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. அப்போது கடைகளில் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை அனைவரும் பின்பற்ற வேண்டும் என்று அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
இந்நிலையில் கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் வெரைட்டி ஹால் ரோட்டில் செயல்பட்டு வந்த பர்னிச்சர் கடை மற்றும் அவினாசி ரோட்டில் செயல்பட்டு வந்த எலக்ட்ரிக்கல் கடை அரசின் கொரோனா விதிமுறைகளை பின்பற்றாமல் நேற்று இரவு 9 மணிக்கு மேல் செயல்பட்டதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
இதன் பேரில் மத்திய மண்டல உதவி கமிஷனர் தலைமையில் மாநகராட்சி பறக்கும் படை அலுவலர்கள் அந்தக் கடைகளுக்கு சென்று ஆய்வு மேற்கொண்டு 2 கடைகளை பூட்டி சீல் வைத்தனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.