December 31, 2020
தண்டோரா குழு
கொரோனா பரவலை தடுக்கும் விதமாக மூன்று புதிய இயந்திரங்கள் கண்டுபிடிக்கப்பட்டு ஆன்லைனில் விற்பனைக்கு வர உள்ளதாக ரோபோடெக்ஸ் இயக்குநர் கூறியுள்ளார்.
கோவை பீளமேடு பகுதியை சேர்ந்த ரோபோடெக்ஸ் புதிய கண்டுப்பிடிப்புக்கான நிறுவனம் 2018ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. கொரோனா பரவலை விதிக்கும் விதமாக கைகடிகார வடிவிலான பிரஸ்செட், புயூர்மணி, புயூர்மணி பிளஸ் ஆகிய மூன்று இயந்திரங்கள் கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்த செய்தியாளர் சந்திப்பு கோவை பத்திரிக்கையாளர் மன்றத்தில் நடைபெற்றது.
இதில் பேசிய நிர்வாக இயக்குநர் ஜோதிமுருகன் கூறுகையில்,
தனியார் பள்ளியில் 5ம் வகுப்பு பயிலும் தனது மகன் ப்ரணவ் க்கு தோன்றிய எண்ணத்தின் அடிப்படையில் இந்த மூன்று இயந்திரங்களும் வடிவமைக்கபட்டதாக தெரிவித்தார். மேலும் கடிகார வடிவிலான பிரஸ்செட் இயந்திரம் 399 ரூபாய்க்கு ஆன்லைன் மூலம் கிடைக்கப்பெறும் என தெரிவித்த அவர் இந்த கடிகார வடிவிலான இயந்திரத்தில் 15மிலி கிருமிநாசினியை நிரப்பினால் ஒரு முறை இதனை அழுத்தும் போது 1மிலி கிருமிநாசினி வெளியேறும் எனவும் 15 முறை கைகளை சுத்தப்படுத்த இது உதவும் என தெரிவித்தார். மற்றொரு கண்டுப்பிடிப்பான ப்யூர்மணி இயந்திரத்தில் 300மிலி கிருமிநாசினி நிரப்பபட்டால் 1500 பண நோட்டுகள் கிருமிநாசினி மூலம் சுத்தம் செய்யபட்டு வெளியே வருமாறு வடிவமைத்துள்ளார். இதனை இரு புறம் வழியாகவும் உபயோகித்து கொள்ளும் படி வடிவமைத்துள்ளதாக தெரிவித்தார். இதன் விலை 4999 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர் இதே போல் ப்யூர்மணி பிளஸ் என்ற இயந்திரம் 5999 ரூபாய் கிடைக்கப்பெறும் என்று தெரிவித்த அவர் இந்த இரு இயந்திரங்கள் மூலம் பணத்தை செலுத்தும் போது கிருமிகள் தொற்று ஏற்படாமல் தடுக்க முடியும் என்று தெரிவித்தார்.
வரும் காலங்களில் புதிய கண்டுப்பிடிப்புகள் உருவாக்கும் மாணவர்களுக்காக அறக்கட்டளை நிறுவனம் ஒன்று துவங்கப்பட்டு அவர்களின் திறமைகளுக்கும் அங்கீகாரம் கிடைக்கப்பெறும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ள இருப்பதாகவும் தெரிவித்தார்.