July 19, 2021
தண்டோரா குழு
கோவை மாநகராட்சியில் கொரோனா தடுப்பூசி தொடர்பான தகவல்களை பெற மற்றும் தடுப்பூசி போட்டுக்கொள்ள முன்பதிவு செய்ய சிறந்த வலைத்தளத்தை உருவாக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
கோவை மாநகராட்சி பகுதிகளில் பல்வேறு மையங்களில் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதனிடையே தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக சில நாட்கள் தடுப்பூசி போடும் பணிகள் நிறுத்தி வைக்கப்படுகிறது.ஆனால் தடுப்பூசி போடுக்கொள்வதில் மக்கள் ஆர்வமுடன் இருப்பதால் அனைத்து மையங்களிலும் இரவு முதலே காத்து இருந்து தடுப்பூசி போட்டுக்கொள்கின்றனர்.
தடுப்பூசி தொடர்பாக தகவல்கள் பெற மக்கள் அலைமோதுகின்றனர்.இதனை தடுக்க மாநகராட்சி சார்பாக டோக்கன் விநியோகம் செய்யப்பட்டு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
இருப்பினும் மக்கள் அதிக அளவில் கூடுவதால் கொரோனா தொற்று பரவ வாய்ப்புள்ளது. இதனை தடுக்க மாநகராட்சி நிர்வாகம் சார்பாக சிறந்த வலைத்தளத்தை உருவாக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது:
மாநகராட்சி சார்பாக கொரோனா தடுப்பூசி தொடர்பான அனைத்து தகவல்கள் பெறுவதற்கும், தடுப்பூசி போட்டுக்கொள்ள எளிய முறையில் முன்பதிவு செய்வதிற்கும், தடுப்பூசி செலுத்தியவர்களின் தரவுகளை சேகரிக்கவும் என அனைத்து தரவுகளும், பணிகளும் நடைபெற சிறந்த வலைத்தளத்தை உருவாக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதற்காக தகுதி வாய்ந்தவர்கள் மாநகராட்சி நிர்வாகத்தை அனுகி தகவல்களை பெறலாம். மேலும் சிறந்த வலைத்தளத்தை உருவாக்குபவர்களுக்கு ரூ.2 லட்சம் வரை பரிசு தொகையும் அளிக்க பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.