April 16, 2021
தண்டோரா குழு
கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளை மாவட்ட ஆட்சியர் நாகராஜன், மாநகராட்சி கமிஷனர் குமாரவேல் பாண்டியன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கோவை மாநகராட்சி புரூக் பீல்டு ரோடு பகுதியில் உள்ள சீத்தாலட்சுமி மருத்துவமனை, மொபைல் சிஸ்டம் சிரியன் சர்ச் சாலை, ஆர்.எஸ்.புரம் தபால் அலுவலகம் அருகில் ஆகிய பகுதிகளில் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளை மாவட்ட ஆட்சியர் நாகராஜன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்.
பின்னர் ஆட்சியர் தெரிவித்ததாவது:
கோவை மாநகராட்சியில் 5 மண்டலங்களில் சிறப்பு முகாம் வாகனங்கள் செயல்பட்டு வருகிறது. அரசு மருத்துவமனைகள் மற்றும் தனியார் மருத்துவமனைகளிலும் பொதுமக்கள் கொரோனா தடுப்பூசிகளை போட்டுக்கொள்ளலாம்.பொது இடங்களில் மக்கள் கூட்டம் கூடுவதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும். முகக்கவசம் கட்டாயம் அணிவது, சமூக இடைவெளியை பின்பற்றுவது, கைகளை அடிக்கடி சோப்பு போட்டு கழுவுவது ஆகியவற்றை முறையாக பின்பற்ற வேண்டும். முகக்கவசம் அணியாமல் இருப்பவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும். அரசு நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும் என தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்திலுள்ள கொரோனா கட்டுப்பாட்டறையினை மாநகராட்சி கமிஷனர் மற்றும் மாவட்ட கலெக்டர் பார்வையிட்டார்கள். இந்த ஆய்வின்போது நகர்நல அலுவலர் ராஜா மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.