January 30, 2020
தண்டோரா குழு
கொரனோ வைரஸ் பாதிப்பை தொடர்ந்து, கோவை அரசு மருத்துவமனையில் 25 படுக்கை வசதிகள் கொண்ட சிறப்பு வார்டு மற்றும் 24 மணி நேரமும் பணியாற்றும் வகையில் சுழற்சி முறையில் மருத்துவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
சீனாவில் வேகமாக பரவிவரும் கொரனோ வைரஸ் தாக்குதல் பாதிப்பு மற்றும் அதனால் ஏற்படும் உயிரிழப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்த நிலையில் இந்த வைரஸ் காய்ச்சலானது சீனா சென்று வரும் வெளிநாட்டு பயணிகளுக்கு பரவத் தொடங்கியுள்ளது. இந்த நிலையில் நேற்று சீனாவிற்கு கோவையை சேர்ந்த 6 பேர் சுற்றுலா சென்று வந்தனர்.இந்த நிலையில் அவர்கள் இந்த கொரனோ வைரஸால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று கூறி கோவை விமான நிலையத்தில் மருத்துவ குழுவினர் பல்வேறு கட்ட சோதனைகளை மற்றும் மருத்துவ பரிசோதனைகளை மேற்கொண்டனர்.
அதன் இறுதியில் அவர்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது. இருந்த போதும் அவர்களை ஒரு மாத காலம் பொது நிகழ்வுகள் மற்றும் பொது மக்கள் கூடும் முக்கிய இடங்களுக்கு செல்லக்கூடாது என்று சுகாதார துறையினரால் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும் தொடர்ந்து தொடர்பில் இருக்கும் படியும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் கோவை அரசு மருத்துவமனையில் கொரனோ வைரஸ் காய்ச்சலுக்காக சிறப்பு வார்டு அமைக்கப்பட்டு உள்ளது. இந்த வார்டில் 25 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும் 24 மணி நேரமும் மருத்துவர்கள் சுழற்சி முறையில் பணியாற்றும் வகையில் பணியமர்த்தப்பட்டுள்ளனர். இந்த வார்டில் அனைத்து விதமான சிறப்பு வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தற்போது வரை கோவை மாவட்டத்தில் இந்த வைரஸ் தாக்குதலால் யாரும் பாதிக்கப்படவில்லை.இருப்பினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தற்போது சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.