March 12, 2021
தண்டோரா குழு
திமுக கூட்டணியில் அவிநாசி தொகுதியில் போட்டியிடும் ஆதித்தமிழர் பேரவையின் வேட்பாளருக்கு ஆதரவாக கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி நிர்வாகிகள் பிரச்சாரம் மேற்கொள்வார்கள் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்த கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.
அப்போது பேசிய அவர்,
திமுக தலைமையிலான கூட்டணி எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் மாபெரும் வெற்றி பெறும் எனவும், காலதாமதம் ஆனது எனவும் தெரிவித்தார். மக்கள் விரும்பும் ஆட்சியை அமைப்போம் எனவும், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் வேட்பாளர் பட்டியல் இன்று மாலையோ அல்லது நாளையோ வெளியாகும் எனவும், தான் போட்டியிடுவது குறித்து ஆட்சிமன்றக் குழு முடிவு எடுக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு ஆதரவாக பிரசாரம் செய்வீர்களா என்ற கேள்விக்கு பதிலளித்த ஈஸ்வரன், கொங்கு மண்டலத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு தொகுதிகள் ஒதுக்கப்பட வில்லை எனவும் அதனால் அவர்களுக்கு ஆதரவாக கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பிரச்சாரம் செய்ய வேண்டிய தேவை இல்லை எனவும் தெரிவித்தார். மேலும் அவிநாசி தனித்தொகுதியில் ஆதித்தமிழர் பேரவை சார்பில் போட்டியிடும் அதியமானுக்கு ஆதரவாக கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி நிர்வாகிகள் பிரச்சாரம் மேற்கொள்வார்கள் என தெரிவித்த அவர், கோவை தெற்கு தொகுதியில் நடிகர் கமலஹாசன் பிரிக்கும் வாக்குகள் திமுக கூட்டணியின் வெற்றி வாய்ப்பை அதிகரிக்கும் என்றார்.
கொங்கு மண்டலம் மற்றும் ஊழல் கோட்டை என்ற கமல்ஹாசன் கருத்துக்கு பதில் அவர், கொங்கு மண்டலம் மட்டும் அல்லாமல் தமிழ் நாடு முழுவதும் ஊழல் கோட்டையாக உள்ளது என குற்றம் சாட்டினார்.