September 1, 2021
தண்டோரா குழு
கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்திற்குட்பட்ட கே.கே.புதூர் மாநகராட்சி உயர்நிலைப்பள்ளியில் மாநகராட்சி கமிஷனர் ராஜகோபால் சுன்கரா ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது பள்ளியிலுள்ள வகுப்பறை வசதி, கணினி அறை, மின் வசதி, குடிநீர் வசதி, கழிப்பறை வசதிகள் ஆகியவற்றை பார்வையிட்டார்.பின்னர் பள்ளிக்கு வருகை தரும் மாணவ,மாணவிகள் கிருமிநாசினி கொண்டு கைகளை சுத்தப்படுத்தியும், முகக்கவசம் அணிந்தும், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்.சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்தப்பட வேண்டும் என பள்ளி ஆசிரியர்களிடம் அவர் தெரிவித்தார்.
தொடர்ந்து ஆர்.எஸ்.புரம் டி.பி.சாலையிலுள்ள 20 லட்சம் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டியில் 24 மணி நேர குடிநீர் திட்டத்தின்கீழ் தொட்டியிலுள்ள நீர் மட்டம், தொட்டியிலிருந்து விநியோகிக்கப்படும் நீரின் அளவு, குழாய்களிலுள்ள நீர் அழுத்தம் ஆகியவற்றை தொடர்ந்து 24 மணிநேரமும் கண்காணிப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள நவீன கருவிகளை பார்வையிட்டார்.
இந்த ஆய்வின்போது மாநகர பொறியாளர் லட்சுமணன், மேற்கு மண்டல உதவி கமிஷனர் சிவசுப்பிரமணியன் மற்றும் பலர் உடனிருந்தனர்.