March 4, 2021
தண்டோரா குழு
ஜவுளி ஸ்பின்னிங் மில்களின் சங்கமான, தென்னிந்திய நுாற்பாலைகளின் சங்கம் (சிஸ்பா), ஒரு ஆரோக்கியமான சிறு, குறு, நடுத்தர தொழில் துறையின் வலிமையான, விவேகமான வளர்ச்சியை எட்டியுள்ளது. இதன் உறுப்பினர்களின் ஒற்றுமையான, ஒருங்கிணைந்த முயற்சியின் விளைவாக, நிர்வாகத்தினர், அரசு மற்றும் பணியாளர்களுக்கு இடையே ஒரு இணக்கமான சூழல் உருவாகியுள்ளது.
உறுப்பினர்கள் மற்றும் தொழில்களில் உள்ள சிக்கலான நிலையை அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று தீர்வுகளை கண்டுள்ளது. சிஸ்பா உறுப்பினர்கள் பயன்பெறும் வகையில், பரிசோதனை மையம் ஒன்றை சிட்ராவை அணுகி அலுவலக வளாகத்திலேயே அமைத்துள்ளது.
இதன் துவக்க விழா இன்று காலை நடந்தது. சிஸ்பாவின் முன்னாள் தலைவர் மற்றும் எல்லன் டெக்ஸ்டைல்ஸ் பி லிமிடெட் நிர்வாக இயக்குனர் வி. சவுந்தர்ராஜன் இந்த வசதியை துவக்கி வைத்தார்.
சிஸ்பா தலைவர் முருகேசன் அனைவரையும் வரவேற்று பேசினார்.சிட்ரா இயக்குனர் டாக்டர் பிரகாஷ் வாசுதேவன் துவக்க உரையாற்றினார். சிஸ்பா துணைத்தலைவர் எஸ். ஜெகதீஷ் சந்திரன், சிறப்பு விருந்தினராக இந்திய ஜவுளிக் கூட்டமைப்பின் தலைவர் டி.ராஜ்குமார், இந்திய பருத்திக் கூட்டமைப்பின் தலைவர் துளசிதரன் ஆகியோர் பேசினர். ரூட்ஸ் நிறுவனத்தின் இயக்குனர் டாக்டர் கவிதாசன் பங்கேற்று சிறப்புரையாற்றினார். சிஸ்பா கவுரவ செயலாளர் ஜி வெங்கடேசன் நன்றி கூறினார். சிஸ்பா துணைத்தலைவர்கள் ஜெ.செல்வன், துணைத்தலைவர்கள் என்.விஜயக்குமார், இணை செயலாளர் ஆர்.அருண் கார்த்திக், சிஸ்பா நிர்வாகிகள், உறுப்பினர்கள், துறைத்தலைவர்கள் பணியாளர்கள் பங்கேற்றனர்.
விழா ஏற்பாடுகளை மேலாளர் ஜெ.வெங்கடேஷ் பிரபு செய்திருந்தார். தென்னிந்திய ஜவுளி ஆராய்ச்சி சங்கம் (சிட்ரா) ஜவுளித்துறைக்கு பயனுள்ள வகையில் பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகிறது.பருத்தி, நுாலிழைகளின் இயல்பு, வேதி பரிசோதனைகளை மேற்கொள்ள என்ஏபிஎல் அங்கீகாரம் (ISO/IEC 17025:2017) பெற்றுள்ளது. சர்வதேச தர நிர்ணயத்திலான அதிநவீன ஆய்வக கருவிகளைக் கொண்டுள்ளது. சிட்ராவின் ஆய்வகங்கள், பரிசோதனைகளுக்கு ASTM, ISO, BS, IS போன்ற முறைப்பாடுகளை பின்பற்றி வருகின்றன.
மேலும் சிட்ரா ஜவுளித்துறையில், நவீனமயாக்கல், சிக்கனம், தொழில்நுட்ப பொருளாதார தீர்வு, ஆராய்ச்சிகள், மின்சக்தி சேமிப்பு, திட்டப்பணிகள், உற்பத்தி மேம்பாடு, தரக்கட்டுப்பாடு, அறிவியல் ரீதியான பணியாளர் தேர்வு, இயந்திர பராமரிப்பு, அறிவியல் ரீதியான திட்டப்பணிகளை மதிப்பீடு செய்தல், இயந்திர மதிப்பீடு, உற்பத்தி மீதான ஆய்வுகள், விலை, நிதிநிலை செயல்பாடுகளிலும் ஆலோசனைகளையும் உதவிகளையும் அளித்து வருகிறது.