August 15, 2018
தண்டோரா குழு
ஆகஸ்ட் 9 முதல் தற்போது வரை கேரளாவில் கனமழை, வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 67 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
கேரளாவில் கடந்த ஆகஸ்ட் 9 முதல் தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவு மழை பெய்து வருவதால் கேரளா முழுவதும் பாதிக்கபட்டு உள்ளது. குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கு கேரளா பகுதிகளில் வெள்ளப்பெருக்கம் ஏற்பட்டு உள்ளது. கனமழை காரணமாக கேரளாவில் உள்ள அணைகள் அனைத்தும் நிரப்பி வருகின்றனர். அதில் குறிப்பாக 30-க்கு மேற்ப்பட்ட அணைகள் தங்கள் கொள்ளளவை எட்டியுள்ளது. இதனால் தண்ணீர் அதிக அளவில் திறந்து விடப்படுகிறது. இதனால் அணைகளை ஒட்டி இருந்த கிராமங்கள் வெள்ளத்தால் பெரிதும் பாதிக்கபட்டு உள்ளது. பல கிராமங்கள் வெள்ளத்தில் சிக்கியதால், கிட்டத்தட்ட 60 ஆயிரம் மக்கள் தங்கள் வீடுகளை இழந்துள்ளனர். அவர்களை நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். கேரளாவில் உள்ள மொத்தம் 14 மாவட்டங்களில் 12 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய சிவப்பு எச்சரிக்கை அறிவிக்கப்பட்டு உள்ளது. பேரிட மீட்புக்குழு பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகளை செய்து வருகிறது.
இந்நிலையில், இன்று மலப்புரத்தில் நிலச்சரிவில் சிக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பேர் உட்பட 14 பேர் உயிரிழந்தனர். அதைபோல் கோழிக்கோடு, கொல்லம், பத்தினம்திட்டா, இடுக்கி, ஆலப்புழா மாவட்டங்களில் 22 பேர் உயிரிழந்தனர். கேரளாவில், வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி இதுவரை 67 பேர் பலியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்காக 1.5 லட்சம் நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதையடுத்து, கேரளாவில் மீட்பு பணிக்காக மத்திய அரசு கூடுதலாக ராணுவ வீரர்களை அனுப்ப வேண்டும் என முதல்வர் பினராயி விஜயன், உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிற்கு கோரிக்கை விடுத்துள்ளார்.