May 8, 2021
தண்டோரா குழு
கேரளாவில் இருந்து கோவைக்கு வரும் வாகனங்களில் தீவிர சோதனை
தெர்மல் ஸ்கேனர் மூலம் வெப்ப அளவு பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது
கேரளா மாநிலத்தில் இருந்து கோவை மாவட்டத்திற்கு வரும் வாகனங்களுக்கு இ-பாஸ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக அனைத்து சோதனைச்சாவடிகளிலும் தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டு அதன் பின்னர் வாகனங்கள் அனுமதிக்கப்படுகிறது. இந்த சோதனையின் போது தெர்மல் ஸ்கேனர் மூலம் உடல் வெப்ப நிலை அளவும் பரிசோதனை செய்யப்படுகிறது.
இதில் வெப்ப அளவு அதிகமாக இருந்தால் அவர்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள் என மாவட்ட நிர்வாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
கேரளா மாநிலத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், அந்த மாநிலத்தில் இருந்து வரும் வாகனங்களுக்கு இ-பாஸ் கட்டாயம் என்று மாநில சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து கோவை மாவட்டத்தில் கேரளா எல்லையையொட்டியுள்ள 13 சோதனைச்சாவடிகளும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. காவல்துறை, வருவாய்த்துறை, சுகாதாரத்துறை ஆகியோர் அடங்கிய குழுவினர் அமைக்கப்பட்டு தீவிர சோதனை நடத்தப்பட்டு வருகிறது. கோவை வாளையார், வேலந்தாவலம், பொள்ளாச்சியில் உள்ள 2 சோதனைச்சாவடிகள், வால்பாறை, ஆனைக்கட்டி, ஆனைமலை ஆகிய பகுதிகளில் உள்ள முக்கிய சோதனைச்சாவடிகளில் தீவிர வாகன சோதனை நடத்தப்படுகிறது. இதில் இ-பாஸ் மற்றும் வெப்ப அளவு மருத்துவ பரிசோதனையும் மேற்கொள்ளப்படுகிறது.
இதுகுறித்து மாவட்ட நிர்வாக அதிகாரி ஒருவர் கூறுகையில்,
‘‘வெப்ப அளவு அதிகமாக இருந்தால் கோவை மாவட்டத்துக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். இ-பாஸ் இருந்தும் வெப்ப அளவு அதிகமாக காட்டினால் அனுமதிக்கப்பட மாட்டார்கள்,’’ என்றார்.