December 7, 2025
தண்டோரா குழு
முன்னணி பல்துறை மருத்துவமனையான கேஎம்சிஹெச் பல்வேறு வகையான நோய்கள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கத்துடன் வருடா வருடம் கேஎம்சிஹெச் “கோவை மாரத்தான் 2025” என்ற பெயரில் சிறப்பு மாரத்தான் நிகழ்ச்சியை நடத்திவருகிறது.
தொடர்ந்து 29-ம் ஆண்டாக நடைபெற்ற இந்த வருட மாரத்தான் குழந்தைகள் இருதய நோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதை மையப் பொருளாகக் கொண்டிருந்தது.
நவம்பர் 7-ம் தேதியன்று கோவையில் 29-ஆம் ஆண்டின் “KMCH கோவை மாராத்தான் 2025” நிகழ்ச்சியை கேஎம்சிஹெச் மருத்துவமனை தலைவர் டாக்டர் நல்லா ஜி பழனிசாமி முன்னிலையில், கோவை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் Dr.K.கார்த்திகேயன் ஐபிஎஸ் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
கேஎம்சிஹெச் சூலூர் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் துவங்கிய இந்த மாரத்தான் அவினாசி ரோடு கேஎம்சிஹெச் பிரதான மருத்துவ மையத்தில் நிறைவடைந்தது.மொத்த தூரம் 16 கிமீ.இதில் மருத்துவர்கள்,மருத்துவத் துறை சார்ந்தவர்கள், செவிலியர்கள், மாணவர்கள், உட்பட சுமார் 4000 பேர் கலந்துகொண்டனர்.
அதுசமயம் உரையாற்றிய கேஎம்சிஹெச் மருத்துவமனை தலைவர் டாக்டர் நல்லா ஜி பழனிசாமி,
கோவையில் கேஎம்சிஹெச் சார்பாக முதல் மாராத்தான் 1991-ல் நடைபெற்றது. பல்வேறு நோய்கள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக இதுபோன்ற மாரத்தான்கள் நடத்துகிறோம். குழந்தைகளுக்கு ஏற்படக்கூடிய இருதய நோய்கள் முன்கூட்டியே கண்டறிந்து உரிய சிகிச்சைகள் எடுத்துக் கொள்வதின் அவசியம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துவது இந்த வருட நிகழ்ச்சி யின் நோக்கம் என்று அவர் குறிப்பிட்டார்.
கேஎம்சிஹெச் செயல் இயக்குனர் டாக்டர் அருண் பழனிசாமி தனது உரையில்,
இந்த நிகழ்ச்சியில் பலர் திரளாகப் கலந்து கொண்டு ஆதரவளித்தது மகிழ்ச்சி அளிக்கிறது. குழந்தைகள் இருதய நலனைப் பாதுகாப்பதில் கேஎம்சிஹெச் தனிக்கவனம் செலுத்தி வருகிறது. சிகிச்சை அளிப்பதோடு மட்டுமன்றி நோய் தடுப்பு மருத்துவத்திலும் அது தொடர்பான கல்வியிலும் நாங்கள் பல முயற்சிகள் மேற்கொண்டுள்ளோம் என்று கூறினார்.
விழா நிறைவில் மாராத்தான் நிகழ்ச்சியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுத் தொகையும் கலந்து கொண்டவர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.