November 8, 2025
தண்டோரா குழு
இந்திய மருத்துவ சேவை வழங்குநர்கள் சங்கம் (AHPI) தமிழ்நாடு கிளையின் சார்பில், கோவை மருத்துவமனை மற்றும் மருத்துவ மைய (கேஎம்சிஹெச்) தலைவர் டாக்டர் நல்லா ஜி பழனிசாமிக்கு மதிப்புமிக்க வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.இந்திய மருத்துவத் துறையில் அவர் ஆற்றிவரும் மிக முக்கியமான பங்களிப்புகளுக்காகவும், நீடித்த சேவைக்காகவும் இந்த விருது வழங்கப்பட்டது.
இந்திய மருத்துவ சேவை நிறுவனங்களின் பிரதிநிதி அமைப்பான AHPI தமிழ்நாடு கிளையின் இரண்டாவது பதிப்பான ‘AHPI CON 2025’-இன் விருது வழங்கும் விழாவில், நவம்பர் 8, 2025 வெள்ளிக்கிழமை கோவையில் உள்ள மெர்லிஸ் ஹோட்டலில் இந்த விருது வழங்கப்பட்டது.
டாக்டர் நல்லா ஜி பழனிசாமி அவர்களின் தொலைநோக்குத் தலைமை மற்றும் உயர்தர மருத்துவ சேவைகளை மக்களுக்கு வழங்குவதில் அவரது அர்ப்பணிப்பு மிக்க ஈடுபாட்டை இந்த விருது பிரதிபலிக்கிறது, இதற்கு முன்னர் கொங்கு நண்பர்கள் சங்கத்தின் மூலமாகவும் அவர் வாழ்நாள் சாதனையாளர் விருதைப் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
விருதைப் பெற்றுக்கொண்ட டாக்டர் நல்லா ஜி பழனிசாமி, “AHPI-இடமிருந்து இந்த வாழ்நாள் சாதனையாளர் விருதைப் பெற்றது எனக்கு மிகப்பெரிய கௌரவத்தையும், மனநிறைவையும் அளிக்கிறது. இந்த விருது எனக்குக் கிடைத்த தனிப்பட்ட அங்கீகாரம் மட்டுமல்ல; கேஎம்சிஹெச் குடும்பத்தின் அயராத உழைப்புக்குக் கிடைத்த சான்றாகும்,” என்று கூறினார்.
தரமான மற்றும் நோயாளிகள் நலனை மையாகக் கொண்ட மருத்துவ சேவைக்கு ஒரு அடையாளமாகத் திகழும் கேஎம்சிஹெச் ஏற்கெனவே AHPI-இன் பல முக்கிய விருதுகளைப் பெற்றுள்ளது. அவற்றில் சில: மருத்துவச் செயல்பாடு மற்றும் செவிலியர் சேவையில் சிறப்பான பங்களிப்புக்கான விருது, பணிபுரிய சிறந்த மருத்துவமனைக்கான விருது, பசுமை மருத்துவமனை விருது, சிறந்த நோயாளி-நட்பு மருத்துவமனை போன்ற பல விருதுகளை பெற்றுள்ளது.
இந்த விழாவில், கங்கா மருத்துவமனை மற்றும் மருத்துவ மையத்தின் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சைப் பிரிவுத் தலைவர் டாக்டர் எஸ். ராஜசபாபதி சிறப்பு விருந்தினராக பங்கேற்றனர்.