February 27, 2021
தண்டோரா குழு
தொழிலாளர்களின் கூலிக்காக பணம் எடுத்து செல்ல அனுமதிக்க வேண்டும், என்று கோவை மாநகராட்சி ஒப்பந்ததாரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து கோவை மாநகராட்சி ஒப்பந்ததாரர்கள் நல சங்க தலைவர் உதயகுமார், செயலாளர் கேசிபி சந்திரபிரகாஷ் ஆகியோர் தேர்தல் கமிஷனுக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியுள்ளதாவது:
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடக்க உள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் கமிஷன் நடத்தை விதிகளின்படி குறிப்பிட்ட தொகைக்கு அதிகமாக பணம் எடுத்து செல்ல முடியாத நிலை ஏற்படும்.தற்போது கோவை மட்டுமன்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஸ்மார்ட் சிட்டி பணிகள், ரோடு, பாலம், குடிநீர் குழாய் திட்ட பணிகள், மழைநீர் வடிகால் என அரசின் பல்வேறு திட்டப்பணிகள் நடைபெற்று வருகிறது.
ஒப்பந்த நிறுவனங்களிடம் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு வாரந்தோறும் கூலி வழங்க வேண்டிய நிலைமை இருக்கிறது. தேர்தல் நேரத்தில் தொழிலாளர்களுக்கு கூலித் தொகை வழங்குவதில் சிக்கல் இருக்கிறது. பணம் வழங்க எடுத்துச் செல்லும்போது தேர்தல் கமிஷன் அதிகாரிகள் நடவடிக்கைக்கு ஆளாக நேரிடும் வாய்ப்புள்ளது.
எனவே ஒப்பந்ததாரர்கள் அவர்களின் ஆண்டு ‘டர்ன் ஓவர்’ அடிப்படையில் தொழிலாளர்களின் கூலிக்காக தேர்தல் காலத்தில் பணம் எடுத்து செல்ல விதிவிலக்கு வழங்க வேண்டும். குறிப்பாக வங்கியில் இருந்து முறையான ஆவணங்களுடன் பணம் எடுத்துச் சென்று தொழிலாளர்களுக்கு வழங்க அனுமதிக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.