April 11, 2018
தண்டோரா குழு
கூடைக்குள் இருப்பது பூ அல்ல;பூ நாகம் என இப்போது தான் தெரியவந்துள்ளது என்று ரஜினி குறித்து இயக்குநர் பாரதி ராஜா கூறியுள்ளார்.
சென்னையில் நேற்று ஐபிஎல் போட்டிகள் நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு அமைப்புகள் போராட்டம் நடத்தியது.இதனால் சென்னை அண்ணா சாலை போராட்டக்களம் போல் இருந்தது.போலீசார் போராட்டக்காரர்கள் மீது தடியடி நடத்தினர்.இந்த போராட்டத்தில் ஈடுபட்ட 780 பேர் கைது செய்யப்பட்டு காலையில் விடுதலை செய்யப்பட்டனர்.தடையை மீறி போராட்டம் நடத்தியதாக பாரதிராஜா,சீமான்,வைரமுத்து உள்ளிட்ட 500 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.இதற்கிடையில்,போராட்டத்தின் போலீசார் தாக்கப்பட்டு குறித்து ரஜினி டுவீட் செய்திருந்தார்.
இந்நிலையில், தமிழர் கலை இலக்கிய பண்பாட்டு பேரவை சார்பில் திரைப்பட இயக்குநர்கள் பாரதிராஜா,சீமான்,கவுதமன்,அமீர்,மற்றும் கருணாஸ்,தமிமூன் அன்சாரி,தனியரசு கூட்டாக பேட்டி அளித்தனர்.
அப்போது பேசிய இயக்குனர் பாரதிராஜா,
சீருடையில் இருந்த காவலர்களை தாக்கியது போராட்டக்காரர்கள் அல்ல.அறவழியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது போலீஸ் நடத்திய வினைக்கு எதிர்வினை எழுந்தது.சிலர் (ரஜினி) நேற்று நடந்ததை வன்முறை என்கின்றனர்.அது வன்முறையல்ல;எதிர்வினை.அதனால் எதிர்வினையை மட்டும் பூதாகரமாக பேசுவது சரியல்ல.நாளை பிரதமர் வரும்போது கருப்புக் கொடி காட்டுவது நிச்சயம்.ஆனால் எங்கு என்பதை கூற முடியாது.
எங்களது எதிர்கால போராட்டங்கள் வேறுவிதமாக இருக்கும்.வரும் 20ம் தேதி ஐபிஎல் நடக்கும்போது போராட்டம் வேறுவிதமாக இருக்கும்.போராட்டத்தில் என்னை கைது செய்தனர்;அது பற்றி ரஜினி பேசவில்லை.கூடைக்குள் இருப்பது பூ அல்ல;பூ நாகம் என இப்போது தான் தெரியவந்துள்ளது. போராட்டத்தின் போது நான் போலீசாரை தாக்கவில்லை,யாரையும் தாக்க வேண்டும் என்பது எங்கள் நோக்கமில்லை.ரஜினி வாய் மட்டுமே அசைக்கிறார்;அவருக்கு வேறு யாரோ குரல் கொடுக்கின்றனர் எனக் கூறினார்.