March 24, 2022
தண்டோரா குழு
கோவையில் கோடை காலம் முன்னதாகவே தொடங்கி உள்ளது. மார்ச் மாதம் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இதனால் கோவை மாநகராட்சிக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் அணைகளின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது. இருப்பினும் மக்களுக்கு தங்கு தடையின்றி குடிநீர் வழங்க மாநகராட்சி சார்பாக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
பில்லூர் அணையிலிருந்து பெறப்படும் குடிநீர் மற்றும் சிறுவாணி அணையில் இருந்து பெறப்படும் குடிநீர் வழங்கும் குழாயில் அடிக்கடி பழுது ஈடுபடுவது வழக்கம். இதனை கோவை மாநகராட்சி நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் சரிசெய்து சீரான இடைவெளியில் குடிநீர் வழங்கி வருகிறது.இந்த நிலையில் கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு எண் 10 க்கு உட்பட்ட சக்தி சாலை சிவனந்தபுரம் பகுதியில் மாநகராட்சி குடிநீர் ஆதாரமாக உள்ள பிரதான குடிநீர் குழாயில் பழுது ஏற்பட்டது.
இந்த பழுது மாநகராட்சி பொறியாளர்கள் தீவிரமாக சரி செய்து வருகிறார்கள். இதனிடையே குடிநீர் குழாயில் பழுது சரி செய்யப்படும் பணிகளை மேயர் கல்பனா ஆனந்தகுமார் திடீரென நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். பின்னர் மாநகராட்சி பொறியாளர்களுக்கு உடனடியாக இந்த குடிநீர் குழாய்களை சரி செய்து மாலைக்குள் குடிநீர் வழங்க உத்தரவிட்டார்.
இந்த ஆய்வின்போது மாநகர பொறியாளர் பொறுப்பு ராமசாமி, உதவி செயற் பொறியாளர் செந்தில் பாஸ்கர் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் உடன் இருந்தனர்.