April 1, 2020
தண்டோரா குழு
கோவை – சமூக விலகலை உறுதியாக கடைபிடிக்க மக்கள் நடமாட்டத்த குறைத்திட காய்கறி தேவைகளுக்காக மக்கள் சந்தைக்கு வருவதை தடுத்திட கோவை மாநகராட்சி வாகனத்தை பயன்படுத்தி குறைந்த விலையில் காய்கறி தொகுப்பு மக்கள் வசிப்பிடத்தில் கொண்டுபோய் சேர்க்க கோவை மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பி.ஆர்.நடராஜன் எம்பி கோரிக்கை கோவை மாவட்ட ஆட்சித்தலைவருக்கு கோரிக்கை வைத்துள்ளார்.
இதுகுறித்து அவர் கோவை மாவட்ட ஆட்சியருக்கு எழுதியுள்ள கடிதத்தில்,
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் மற்றும் அதன் பரவலை தடுக்க கோவை மாவட்ட நிர்வாகம் பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டு வருவது பாராட்டுக்குரியதே. தனித்திரு, விலகியிரு என்கிற அரசின் வலியுறுத்தல் பெரும்பாலான கோவை மக்கள் பின்பற்றி வருகின்றனர். ஆனால் வேறுவழியின்றி காய்கறிகளை வாங்குவதற்கு மக்கள் சந்தைக்கு வந்தாகவேண்டிய சூழல் உள்ளதை மறுக்க முடியாது. இதன்காரணமாக காந்திபுரம், உக்கடம், டவுன்ஹால் உள்ளிட்ட மார்க்கெட் உள்ள பகுதிகளில் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் ஏராளமானோர் கூடுவதை கண்கூடாக பார்க்க முடிகிறது. இதனை தவிர்க்கும் வகையில் பொதுமக்களின் வீட்டிற்கே குறைந்த விலையில் காய்கறி தொகுப்பை கொண்டு போய் சேர்க்கும் நடவடிக்கையை தூத்துக்குடி மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்டுள்ளது. இது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
அதுபோன்ற நடவடிக்கையை கோவை மாவட்டத்தில் நாமும் மேற்கொண்டால் அது மக்களின் நடமாட்டத்தை பெருமளவு கட்டுப்படுத்தும் என எண்ணுகிறேன்.கோவை மாநகராட்சி ஆனையரிடம் இதுகுறித்து கலந்தாலோசித்து மாநகராட்சி நிர்வாகத்தின் வசம் உள்ள வாகனத்தை பயன்படுத்தி சுமார் ஐந்து நாட்கள் பயன்படுத்தும் வகையிலான காய்கறி தொகுப்பை மார்க்கெட் வியாபரிகளிடம் பேசி குறைந்த விலை நிர்ணயம் செய்யவும், அதனை மக்கள் வசிப்பிடத்திற்கு சென்று விற்பனை செய்யலாம். கோவை மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் எந்தந்த வார்டுகள், எந்தந்த தேதி என்பதை நிர்ணயம் செய்து விநியோகிக்கலாம். இந்நடவடிக்கைக்கு தன்னார்வலர்களை பயன்படுத்தலாம். இதன் முலம் சமூக விலகளை உறுதிப்படுத்திடவும், மக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த முடியும் என நம்புகிறேன். இதனை மாவட்ட நிர்வாகம் பரிசீலனை செய்ய முயற்சி மேற்கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்..