March 12, 2018
தண்டோரா குழு
குரங்கனி தீ விபத்து தொடர்பாக மீட்பு பணிகளில் எந்தளவிற்கு அரசு மும்முரமாக இருக்கிறதோ அதேபோல் எதிர்காலத்தில் பாதுகாப்பாக இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என நடிகர் கமலஹாசன் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து கோவையில் செய்தியாளர்களை சந்தித்த அவர்,
குரங்கனி தீ விபத்தில் பாதிக்கப்பட்ட ஒரு மாணவியின் பெற்றோரிடம் பேசியதாக குறிப்பிட்ட அவர்,இதுவிபத்து தான் எனவும் இதில் கோவப்பட ஒன்றுமில்லை என கூறினார்.மீட்பு பணிகளில் அரசு நல்ல ஒத்துழைப்பு தருவதாகவும் காணாமல் போனவர்களை கண்டுபிடிப்பதில் கடமையை சிறப்பாக செய்கிறார்கள் எனவும் பாராட்டு தெரிவித்தார்.
மேலும்,இதுபோன்ற நிகழ்வுகள் குறித்து விழிப்புணர்வு இருக்க வேண்டும் எனவும் இதுபோன்ற நிகழ்வுகளை பெரும் உதாரணமாக கொள்ள வேண்டும் எனவும் சுட்டிக்காட்டிய அவர் மீட்பு பணிகளில் மும்முரமாக இருக்கும் அரசு அதேபோல் எதிர்காலத்தில் பாதுகாப்பாக இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.எதிர்காலத்தின் ஒரு பகுதியை தீக்கிறையாக்கி இருக்கிறோம் எனவும் அரசின் செயல்கள் பாராட்டுக்குரிய இந்த நேரத்தில் தான் அங்கு சென்று அவர்களுக்கு இடையூராக இருக்க விரும்பவில்லை என்றும் கூறினார்.
இதேபோல் வனப்பகுதிகளில் நாம் அஜாக்கிரதையாக இருந்ததாகவும் வனப்பகுதிகளில் கேளிக்கைகளை தவிர்க்கலாம் என்றும் கூறிய அவர்,இதுபோன்ற விபத்துக்கள் நடந்து முடிந்த பிறகு அதனை செய்தியாக்கும் ஊடகங்கள் அதற்கு முன்பாகவே இதுபோன்று நடைப்பெறாமல் இருக்க விளம்பரப்படுத்தலாம் எனவும் அறிவுறுத்தினார்.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து உள்ளதில் சந்தேகமே இல்லை என்றும் காவிரி மேலாண் வாரியம் அமைக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.சிறுவாணி பவானி ஆறுகளின் குறுக்கே கேரள அரசு தடுப்பணை கட்டுவது தொடர்பாக அம்மாநில முதல்வருடன் விரைவில் பேசுவேன் என்றும் நடிகர் கமலஹாசன் தெரிவித்தார்.