March 12, 2018
தண்டோரா குழு
தேனி மாவட்டம், குரங்கணி மலைப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத் தீயில் சிக்கி ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த தம்பதி உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டம் குரங்கணி மலைப்பகுதிக்கு சென்னையில் இருந்து 24 பேரும், ஈரோடு,திருப்பூர் பகுதியைச் சேர்ந்த 12 பேரும் டிரக்கிங் சென்றனர். இவர்கள் சென்ற கொழுக்குமலை வனப்பகுதி கேரள வனத்துறைக்கும், தமிழக வனத்துறைக்கும் இடைப்பட்ட பகுதியாகும். இதற்கிடையில் இவர்கள் டிரக்கிங் முடிந்து திரும்பும் போது காட்டு தீயில் சிக்கியுள்ளனர். இதில், 9 பேர் உடல்கருகி பலியானார்கள்.
இந்த தீ விபத்தில் இறந்த ஈரோட்டை சேர்ந்த தம்பதி திவ்யா-விவேக் ஆகியோருக்கு திருமணம் முடிந்து மூன்றரை மாதங்களே ஆகிறது. இருவரும் காதல் திருமணம் செய்துள்ளனர். துபாயில் இருந்த விவேக் கடந்த மார்ச் 1ம் தேதி தான் நாடு திரும்பியுள்ளார். சொந்த நாட்டுக்கு வந்த கையோடு தன் மனைவியுடன் ட்ரெக்கிங் சென்றுள்ளார். இவர்களுடைய திருமணத்தை முன்னின்று நடத்திய நண்பர்களான தமிழ்ச்செல்வன் மற்றும் கண்ணன் ஆகிய நால்வரும் சேர்ந்துதான் இந்தப் பயணத்துக்குச் சென்றிருக்கின்றனர். இவர்கள் 4 பேரும் ஈரோட்டை அடுத்த கவுந்தப்பாடியைச் சேர்ந்தவர்கள். அதில் 3 பேர் உயிரிழந்தும் ஒருவர் உயிருக்குப் போராடி வருவதுமான தகவலை அறிந்து அப்பகுதிவாசிகள் மிகுந்த வருத்தத்தில் இருக்கின்றனர்.
மலை ஏற்றத்துக்கு முன்பு, விவேக் தன் ஃபேஸ்புக் பக்கத்தில், கொழுக்குமலை பகுதிக்கு ட்ரெக்கிங் செல்வதாக புகைப்படத்துடன் மகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார்.