• Download mobile app
06 Sep 2025, SaturdayEdition - 3496
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

குப்பைக்கு செல்லாமல் பரிசாகும் காகிதம் – கோவை மாற்றுத்திறனாளி மாணவியின் அசத்தல் திறமை !

November 23, 2023 தண்டோரா குழு

பரிசு என்ற வார்த்தை அனைவருக்கும் மகிழ்ச்சியை கொடுக்கக்கூடிய ஒன்று. அப்படிப்பட்ட பரிசு எப்போதும் மனதுக்கு வியப்பையும்,சந்தோஷத்தையும் தரக்கூடியது.அதுவும் நமக்கு பிடித்தமானவருக்கு நம் கையாலே செய்து கொடுப்பது என்பது கூடுதல் சிறப்பு.

அந்த வகையில் காகிதத்தில் பல்வேறு வகையான பொம்மைகளை செய்து அசத்தி வருகிறார் கோவையைச் சேர்ந்த ராதிகா ஆறுமுகம். மாற்றுத்திறனாளி மாணவியான இவர் பலருக்கும் முன்னுதாரணமாக விளங்கி வருகிறார்.ஆரம்பத்தில், தொலைதூரக் கல்வி மூலம் வீட்டில் இருந்தபடியே படித்துக் கொண்டு பகுதி நேர பணியாக காகித கலை வடிவமைப்பில் ஈடுபட்டு வந்த இவர், தற்போது வரை 3000த்திற்கும் அதிகமான பேப்பர் பொம்மைகளை செய்து அசத்தி உள்ளார்.

கோவை பாரதி புரத்தைச் சேர்ந்த ராதிகா ஆறுமுகம் பயனற்ற காகிதங்களைக் கொண்டு புதுவகையிலான பொம்மைகளை உருவாக்கி வருகிறார். செய்தித்தாள்கள் மற்றும் காகித கழிவுகளை மட்டுமே மூலதனமாகக் கொண்டு பிறக்கும் இந்த பொம்மைகள் இறுதியில் வண்ணம் சேர்க்கப்படும் போது மிக நேர்த்தியுடனும் காணப்படுகிறது.

தனித்துவமான சிந்தனை:

பொதுவாகவே பொம்மைகள் என்றால், வெள்ளை நிறத்தில் இருப்பது வழக்கம். எனவே வெள்ளை தான் அழகு என்ற கருத்து அடிப்படையாகவே புகுத்தப்பட்டுள்ளது.அந்த வழக்கத்தை மாற்றும் விதமாக கருப்பு பொம்மைகள் என்ற கருத்தை முன்னெடுத்து, நிற வேற்றுமைக்கு எதிரான புதிய முயற்சியை இந்த கலையில் புகுத்தி தற்போது வரை 3,000 பொம்மைகளை செய்துள்ளார் ராதிகா. எல்லோரது பாராட்டுகளையும் பெற்ற இவரது படைப்புகள் வெளிநாடு வரை பயணம் செய்கின்றன.

இதுகுறித்து ராதிகா கூறும்போது:

சிறு வயது முதலே கலைகளில் ஆர்வம் கொண்டு புதுப்புது வடிவமைப்புகளை உருவாக்கும் பழக்கம் கொண்ட எனக்கு, திடீரென உருவானதே இந்த காகித பொம்மை.ஆரம்பத்தில் இதனை உருவாக்கி நண்பர்களுக்கு பரிசாக வழங்கும்போது அனைவரின் பாராட்டுகளையும் பெற்றது. அவர்களது தூண்டுதலின் பேரில், மேலும் இந்த முயற்சியில் ஈடுபட ஆரம்பித்தேன்.

தொடர்ந்து பலரிடம் இதற்கான அங்கீகாரம் கிடைக்க, இந்த படைப்பை மேலும் மெருகேற்றி அதில் ஒரு யுக்தியை புகுத்தினேன். அந்த வகையில் பொம்மைகள் என்றாலே வெள்ளை நிறத்தில் தான் தற்போது வரை இருந்துள்ளன. அதனை மாற்றி கருப்பு என்பதும் அழகுதான் என்ற கருத்தை மையமாகக் கொண்டு எனது பொம்மைகள் அனைத்தையும் கருப்பு நிறத்தில் செய்ய ஆரம்பித்தேன். ஆரம்பத்தில் பொம்மைகளை செய்ய தயாரித்த நான் தற்போது அதில் உள்ள பல்வேறு வகையான நுணுக்கங்களை கற்று தெரிந்து, தற்போது இதனை வர்த்தக ரீதியாகவும் செய்து வருகிறேன்.

வருங்காலத்தில் இந்தப் பொருட்களை மையமாக வைத்து விற்பனை நிலையம் தொடங்குவது குறித்த திட்டம் உள்ளதாகவும் கூறிய ராதிகா இன்று பல்வேறு கல்லூரிகளில் workshop-குகளை
நடத்தி வருகிறார்.இன்றைய காலகட்டத்தில் சகல வசதிகளையும் பெற்ற நம்மைப் போன்ற இயல்பான மனிதர்களே, வாழ்வில் பல்வேறு சிக்கல்களை சந்தித்து வரும் சூழலில், தனக்கான ஒரு பாதையை தேர்ந்தெடுத்து, இயற்கை கொடுத்த குறைகளையும் நிரைகளாக்கி பிறரையும் மகிழ்விக்க வேண்டும் என்ற ராதிகாவின் இந்த குறிக்கோளுக்கு வாழ்த்துக்கள்.

மேலும் படிக்க