January 30, 2018
தண்டோரா குழு
குட்கா வழக்கில் சிபிஐ விசாரணை கோரி திமுக எம்எல்ஏ ஜெ. அன்பழகன் தொடர்ந்த வழக்கில் தேதி குறிப்பிடப்படாமல் தீர்ப்பு ஒத்திவைப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்களை விற்பனை நடைபெறுவது குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடத்தி வரும் நிலையில், ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி மேற்பார்வையில் சி.பி.ஐ. விசாரிக்க உத்தரவிட வேண்டும் என திமுக சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கின் இறுதி விசாரணை கடந்த 25ஆம் தேதி நடைபெற்றது. அப்போது, குட்கா முறைகேடு வழக்கில் டி.ஜி.பி. மற்றும் மத்திய மாநில அரசுகளின் உயர் அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பதால், இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என அன்பழகன் தரப்பு வழக்கறிஞர்கள் வாதிட்டார். ஆனால், குட்கா ஊழல் புகார் தொடர்பான விசாரணை சரியான பாதையில் செல்வதால், குற்றச்சாட்டுகள் அடிப்படையில் மட்டும் வழக்கை சிபிஐக்கு மாற்றக் கூடாது என்று தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயணன், வாதிட்டார்.
இதையடுத்து தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, மற்றும் நீதிபதி அப்துல் குத்தூஷ் அமர்வு, எழுத்துப்பூர்வமான வாதங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.
இந்நிலையில், மத்திய அரசு தவிர்த்து மற்ற இரு தரப்பும் எழுத்துப்பூர்வமான வாதங்களை இன்று உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. இதை தொடர்ந்து வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.