June 7, 2018
தண்டோரா குழு
குடியரசுத்தலைவரை கோவிலுக்குள் செல்ல அனுமதிக்காத பிரம்மா கோவில் அர்ச்சகரை கைது செய்யக்கோரி கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் அருகே திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர் மாவட்டத்திலுள்ள புஸ்கரிலுள்ள பிரம்மா கோவிலை தரிசிப்பதற்காக குடியரசு தலைவர் தனது மனைவியுடன் சென்றார்.அங்கே ஜாதியை காட்டி குடியரசுத்தலைவரை நிர்வாகத்தினர் உள்ளே அனுமதிக்கவில்லை.இதனால் அவர் கோவிலுக்கு வெளியே கற்பூரம் பற்ற வைத்து சாமி கும்பிட்டு சென்றுள்ளார்.இச்சம்பவம் தேசத்திற்கே அவமானம் எனக்கூறி திராவிடர் கழகத்தினர் தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் அருகே நடந்த ஆர்ப்பாடத்தில் தீண்டாமை ஒழிப்பு சட்டத்தின் கீழ் அர்ச்சகரை கைது செய்ய வலியுறுத்தியும்,அர்ச்சகர் உரிமை சட்டத்தை கொண்டுவர வேண்டியும் கண்டன கோசங்களை எழுப்பினர்.