July 10, 2018
தண்டோரா குழு
கோவை நகரின் குடிநீர் பராமரிப்பு பணிகளுக்கான அனுமதியை பிரான்ஸ் நாட்டை சேர்ந்த தனியார் நிறுவனத்திற்கு வழங்கியதாக கூறி கோவை மாநகராட்சியை கண்டித்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட எஸ் டி பி ஐ கட்சியினர் நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட எஸ் டி பி ஐ கட்சியினர், பிரான்ஸ் நாட்டை சேர்ந்த சூயஸ் எனும் தனியார் நிறுவனத்திற்கு கோவை மக்களின் கனவு திட்டமான 24 மணி நேர குடிநீர் சேவைக்கான பராமரிப்பு பணிகளை 26 ஆண்டு காலத்திற்கு ரூ.3ஆயிரத்து 150 கோடி மதிப்பில் அனுமதி வழங்கியது கண்டனத்துக்கு உரியது என்றும், மத்திய அரசின் நிதி உதவி பெற்று மாநில அரசின் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், மாநகராட்சி என அரசு நிறுவனத்தின் மூலம் திட்டத்தை செயல்படுத்தாமல் வரலாற்றில் இல்லாதவாறு தனியார் மூலம் குடிநீர் விநியோகத்தை செயல்படுத்துவது ஏற்க முடியாது என்றனர்.
இத்திட்டத்தை செயல்படுத்தும் மாநகராட்சியை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.மேலும், முறையாக பொதுமக்களின் கருத்துக்கேட்பு இல்லாமல் இத்திட்டத்தை செயல்படுத்த அரசு முயல்வதாகவும்,திட்டம் தொடர்பான தகவல்களை முழுமையாக தெளிவாக வெளியிட தயங்குவதாகவும் குற்றச்சாட்டப்பட்டது.காவல்துறையினர் தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.