January 21, 2021
தண்டோரா குழு
கோவையில் பாதசாரிகள் நடந்து செல்ல சாலைகளில் சிறப்பு வசதி செய்யப்பட்டு உள்ளது.
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கோவையில் உள்ள உக்கடம் பெரிய குளம் உள்பட பல்வேறு குளங்கள் சீரமைக்கப்பட்டு நடைபாதை வசதி, வைபை வசதி, நவீன இருக்கைகள் உள்பட பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் கோவை மாநகரின் முக்கிய சாலைகளின் ஓரம் சைக்கிள் செல்வதற்கு என்று தனி பாதை, மக்கள் நடந்து செல்ல நடைபாதைகள் அமைத்து அவற்றின் மேல் பகுதியில் பல வண்ண நிறங்களில் அழகுபடுத்தி சிறப்பு வசதிகள் செய்ய முடிவு செய்யப்பட்டது.
அதன்படி கடந்த 2019ம் ஆண்டு நவம்பர் மாதம் சோதனை அடிப்படையில் கோவை மாநகராட்சி எதிரே டவுன்ஹாலில் சாலையோரம் உள்ள நடைபாதையின் மேல் பகுதியில் ஏராளமான புடவைகள் கட்டி தொங்கவிடப்பட்டு சிறப்பு வசதிகள் செய்யப்பட்டிருந்தது. அத்துடன் அந்த நடைபாதையில் பொதுமக்கள் அமர்ந்து ஓய்வு எடுத்து செல்லும் வகையில் டயர்களை கொண்டு இருக்கையும் அமைக்கப்பட்டன. மேலும் சாலைகளின் சந்திப்பு பகுதிகளில் வாகன ஓட்டிகள் கவனமாக செல்லும் வகையில் ரோட்டில் பல வண்ண நிறங்களில் சாயம் பூசப்பட்டு இருந்தது.
இதுபோன்று தற்போது கிராஸ்கட் ரோட்டில் செய்யப்பட்டு வருகிறது. சாலையில் வண்ண நிறங்களில் சாயம் பூசப்பட்டு வருகிறது.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘பெரியகடை வீதி, ராஜவீதி, வடவள்ளி, துடியலூர், சாய்பாபா காலனி போன்ற 26 இ்டங்களில் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது,’’ என்றார்.