June 8, 2021
தண்டோரா குழு
கோவை மாவட்டத்தில் உள்ள கிராம ஊராட்சிகள், பேரூராட்சிகளில் 511 தள்ளு வண்டிகள், நடமாடும் வாகனங்கள் மூலம் காய்கறி, மளிகை பொருட்கள் முழு ஊரடங்கின் போது விற்பனை செய்யப்பட்டு வந்தது. தற்போது தளர்வுகள் அறிவிக்கப்பட்ட போதிலும் இந்த வாகனங்கள் மூலம் விற்பனை தொடர்ந்து நடைபெறுகிறது என மாவட்ட நிர்வாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த கடந்த 10ம் தேதி முதல் தளர்வுகளுடன் கூடிய முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. ஆனால் தொற்று அதிகரித்ததை தொடர்ந்து தளர்வில்லா ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. இதனால் காய்கறி கடைகள், மளிகை கடைகள் உள்பட அனைத்து கடைகளும் மூடப்பட்டன.பொதுமக்கள் காய்கறிகள் வாங்க வசதியாக நடமாடும் வாகனங்கள் மூலம் காய்கறிகள் விற்பனை செய்ய நடவடி க்கை எடுக்கப்பட்டது. மாவட்டத்தில் 2 ஆயிரத்து 600 வாகனங்கள் மூலம் காய்கறிகள் விற்பனை செய்ய அனுமதி அளிக்கப்பட்டது.
இதன்படி கோவை மாவட்டத்தில் உள்ள கிராம ஊராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் தள்ளு வண்டிகள், நடமாடும் வாகனங்கள் மூலம் மளிகை பொருட்கள், காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டது. தற்போது 7 ம் தேதி முதல் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு காய்கறி, மளிகைக்கடைகள் உள்ளிட்டவை காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. எனினும் இந்த நடமாடும் வாகனங்கள் சேவை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இதுகுறித்து மாவட்ட நிர்வாக அதிகாரி ஒருவர் கூறியதாவது:
கோவையில் மொத்தம் 12 ஊராட்சி ஒன்றியங்களில் 228 ஊராட்சிகள் உள்ளன. இங்கு வசிக்கும் பொதுமக்களுக்கு தேவையான , காய்கறி, மளிகை பொருட்களை வீடு, வீடாக விற்பனை செய்ய 312 வாகனங்கள் மற்றும் தள்ளு வண்டிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
37 பேரூராட்சிகளில் 199 நடமாடும் வாகனங்கள், தள்ளுவண்டிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.இவர்கள் வீடு, வீடாக சென்று, காய்கறிகள், மளிகை பொருட்களை தற்போதும் விற்பனை செய்து வருகின்றனர். இந்த சேவை தொடர்ந்து நடைபெறும்.
இவ்வாறு அவர் கூறினார்.