April 16, 2018
தண்டோரா குழு
ஜம்மு காஷ்மீரில் 8 வயது சிறுமி ஆசிபா பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் ஆசிபாவின் குடும்பம் மற்றும் வழக்கறிஞருக்கு பாதுகாப்பு வழங்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் கத்துவா பகுதியைச் சேர்ந்த 8 வயது சிறுமி ஆசிபா. இவர் ஜனவரி மாதம் கடத்தப்பட்டு மயக்க மருந்து கொடுத்த 8 நபர்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். கோயில் குருக்கள், ஓய்வு ஆசிரியர், அவரது மகன் மற்றும் காவல்துறை அதிகாரிகள் என 8 பேரின் இந்த கொடூரச்செயலுக்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது. இதையடுத்து, கத்துவா மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெறும் வழக்கில், சிறுமியின் தரப்பில், வழக்கறிஞர் தீபக் சிங் ராஜவாட் வாதாடுகிறார். இந்த வழக்கில், 8 பேரின் பெயர் குற்றப்பத்திரிகையில் இடம்பெற்றுள்ளது. இந்த வழக்கை, காஷ்மீரிலிருந்து சண்டிகருக்கு மாற்ற வேண்டும் என சிறுமியின் தந்தை சார்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம்,
‘சிறுமியின் குடும்பத்துக்கு போதிய பாதுகாப்பு வழங்க வேண்டும்’ என ஜம்மு காஷ்மீர் மாநில அரசுக்கு உத்தரவிட்டது. இதேபோல, ‘சிறுமியின் சார்பில் ஆஜராகும் வழக்கறிஞருக்கும் போதிய பாதுகாப்பு வழங்க வேண்டும்’ எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், வழக்கை சண்டிகருக்கு மாற்றுவது தொடர்பாக 27-ம் தேதி விசாரணை நடத்தப்படும் எனக் கூறி நிதிமன்றம் வழக்கை ஒத்தி வைத்துள்ளது.