November 2, 2020
தண்டோரா குழு
பிரபல பாலிவுட் நடிகர் ஷாரூகானின் பிறந்த நாளை முன்னிட்டு காவேரி கூக்குரல் இயக்கத்தின் மூலம் 500 மரக்கன்றுகளை நட போவதாக பாலிவுட் நடிகை ஜுஹி சாவ்லா தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இந்தி திரையுலகின் பிரபல நடிகையாக திகழும் ஜூஹி சாவ்லா ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு தொடங்கி வைத்த காவேரி கூக்குரல் இயக்கத்துக்கு தொடக்கம் முதலே ஆதரவு அளித்து வருகிறார்.குறிப்பாக, தனது சினிமா துறை நண்பர்களின் பிறந்த தினத்தில் காவேரி கூக்குரல் இயக்கத்தின் மூலம் மரங்கள் நடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.
அதன் தொடர்ச்சியாக, நடிகர் ஹாரூகானின் பிறந்த தினமான இன்று (நவம்பர் 2) அவருக்கு பிறந்த நாள் பரிசாக 500 மரங்கள் நடப் போவதாக தெரிவித்துள்ளார்.இதற்கு முன்பு பாலிவுட் நடிகர்கள் ரிஷி கபூர், ஆயுஷ்மான் குரானா, பாடகி ஆஷா போஸ்லே, லதா மங்கேஷ்கர், பட தயாரிப்பாளர்கள் அனுபம் கேர், யஷ் சோப்ரா உள்ளிட்டோருக்காக சாவ்லா அவர்கள் மரக்கன்றுகள் நட உறுதி ஏற்றார். மேலும், தனது மகன் அர்ஜூனின் பிறந்த நாளன்றும் மரக்கன்றுகள் நட ஆதரவு அளித்தார்.
தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவில் காவேரி கூக்குரல் இயக்கத்தின் களப்பணியால் சுமார் 83 லட்சம் மரக்கன்றுகளை விவசாயிகள் தங்கள் நிலங்களில் நட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.