April 17, 2018
தண்டோரா குழு
காவிரி விவகாரத்தில் வாரியம் அமைக்கப்படுவது உறுதி என தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தெரிவித்துள்ளார்.
மாணவிகளை தவறான வழிக்கு அழைத்த பேராசிரியர் நிர்மலா தேவி விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில் சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது பேசிய அவர்,
“பேராசிரியர் நிர்மலா தேவி விவகாரத்தில் என்னை இழுப்பது தவறானது,ஆதாரமற்றது, முட்டாள் தனமானது.பேராசிரியை நிர்மலாதேவி தொடர்பான செய்திகளை பார்த்தேன்.மாணவர்களை பேராசிரியர் தவறாக வழி நடத்திய சம்பவம் கண்டனத்திற்குரியது.தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும்.பேராசிரியர் நிர்மலா தேவி விவகாரத்தில் குற்றச்சாட்டு உறுதிசெய்யப்படும் பட்சத்தில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
மேலும்,காவிரி விவகாரத்தில் வாரியம் அமைக்கப்படுவது உறுதி.தமிழகத்திற்கு சாதகமான முடிவு எடுக்கப்படும்.ஆளுநர்கள் மாநாட்டில் காவிரி குறித்து நான் பேசினேன்.டெல்டா விவசாயிகள் பயன்பெற காவிரி மேலாண்மை வாரியம் உடனடியாக அமைப்பதே சரி என பேசினேன்.காவிரி விவகாரம் தொடர்பாக இன்று கூட மத்திய அமைச்சர் கட்கரியிடம் பேசினேன்.காவிரி விவகாரத்தில் தமிழகத்திற்கு சாதகமாக நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி உறுதியளித்தார்.காவிரி விவகாரத்தில் தமிழக விவசாயிகளுக்கு ஆதரவாக விரைவில் நல்ல முடிவு வரும் என்றார்”.