February 22, 2018
தண்டோரா குழு
காவிரி விவகாரத்தில் தமிழக அரசு எடுக்கும் அனைத்து முயற்சிகளுக்கும் திமுக துணை நிற்கும் என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
காவிரி விவகாரம் குறித்து சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் இன்று நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 39 கட்சிகள் பங்கேற்றுள்ளனர்.
இக்கூட்டத்தில் பேசிய மு.க ஸ்டாலின்,
காவிரி வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பு விவசாயிகளிடம் ஏமாற்றத்தை அளித்துள்ளது. தமிழகத்துக்கு காவிரியில் கூடுதலாக நீர் பெற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். நடுவர் மன்ற இடைக்கால உத்தரவை கர்நாடக அரசு செயல்படுத்தியது இல்லை. காவிரி மேலாண்மை வாரியத்தை 6 வாரத்தில் அமைக்க மத்திய அரசுக்கு மாநில அரசு அழுத்தம் தர வேண்டும்.காவிரி விவகாரத்தில் தமிழக அரசின் முயற்சிக்கு திமுக துணை நிற்கும் என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மேலும், உச்சநீதிமன்ற தீர்ப்பில் குறைக்கப்பட்ட 14.75 டி.எம்.சி. நீரை திரும்பப் பெற சட்ட ரீதியாக அரசு அணுக வேண்டும்.விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் ஆலோசனைப்படி வாட்டர் செக்யூரிட்டி போர்டு அமைத்து நீர் சேமிப்பு வழிசெய்ய வேண்டும் என ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.அதைப்போல் வேளாண்மைக்கு என தனி பட்ஜெட் வெளியிட அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.