March 10, 2018
தண்டோரா குழு
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவியை ராஜினாமா செய்யவேண்டும் எனவும் , முதல் நபராக ராஜினாமா செய்ய தயாராக இருப்பதாக தரும்புரி நாடாளுமன்ற உறுப்பினர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.
கோவை விமான நிலையத்தில் பா.ம.க இளைஞர் அணி தலைவரும் , தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது பேசிய அவர்,
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க விடாமல் சூழ்ச்சி நடக்கின்றது எனவும், கர்நாடகாவில் ஆட்சியை பிடிக்க முயலும் பா.ஜ.க , காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் வேண்டும் என்றே கால தாமதம் செய்கின்றது. மார்ச் 29ம் தேதிக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வில்லை எனில் மார்ச் 30ம் தேதிக்கு பின்னர் தமிழகத்தில் போராட்டம் வெடிக்கும். மாணவர்கள், இளைஞர்கள், விவசாயிகள் என அனைவரும் போராட்டத்தில் கலந்து கொள்வார்கள்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வில்லை எனில் தமிழகத்தில் உள்ள மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள், தமிழக சட்ட மன்ற உறுப்பினர்கள் அனைவரும் ராஜினாமா செய்ய வேண்டும் எனவும், அப்போதுதான் அரசியல் சாசன நெருக்கடி ஏற்படும் எனவும் தெரிவித்தார்.
மேலும், எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் சொல்வதைப்போல சட்டமன்றத்தை கூட்டினால் எதுவும் நடக்காது என தெரிவித்த அவர்,
காவிரி விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடி, தமிழக தலைவர்களை சந்திக்க மறுப்பது தமிழகத்திற்கு அவமானம் எனவும் தமிழக அரசு மத்திய அரசின் அடிமையாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ராஜினாமா செய்வது என்பது மிகப்பெரிய நெருக்கடியை ஏற்படுத்தும் என தெரிவத்த அவர், காவிரி விவகாரத்திற்காக முதல் நபராக ராஜினாமா செய்ய தயார் எனவும் மற்றவர்களும் ராஜினாமா செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
சென்னை அஸ்வினி பெண் படுகொலை செய்யப்பட்டதற்கு கடுமையான நடவடிக்கை எடுப்பத்தோடு, சட்டத்தை பலப்படுத்த வேண்டும்.
ஏற்கனவே அவர் கொடுத்த புகாரின்பேரில் கடுமையான நடவடிக்கை எடுத்திருந்தால் இந்த சம்பவம் நடைபெற்று இருக்காது. எச்சரித்து அனுப்பி விட்டதன் விளைவுதான் இது என்றார். இதுபோல தினமும் ஒரு சம்பவத்தை பார்த்து வருவதாகவும், இது குறித்து விழிப்புணர்வை மக்கள்டம் ஏற்படுத்த வேண்டும். இந்த அரசிடம் சொல்லி எந்த வித பிரயோஜனமுமில்லை என்றார்.