April 23, 2018
தண்டோரா குழு
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி தமிழகம் முழுவதும் திமுக,உட்பட 9 கட்சிகள் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்தி திமுக தலைமையில் காங்கிரஸ்,மதிமுக,கம்யூனிஸ்ட்,மார்க்சிஸ்ட்,விடுதலை சிறுத்தைகள் உட்பட 9 கட்சி தலைவர்கள் கடந்த 1ம் தேதி முதல் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.முதல் கட்டமாக 4 நாட்கள் தொடர் மறியல் போராட்டம் நடந்தது.இதைதொடர்ந்து 5ம் தேதி அனைத்துக் கட்சிகள் சார்பில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது. அன்றைய தினம் மு.க.ஸ்டாலின் மற்றும் தலைவர்கள் அண்ணா சாலை மற்றும் கடற்கரை சாலையில் மறியல் போராட்டம் நடத்தியதால் கைது செய்யப்பட்டனர். இதை தொடர்ந்து காவிரி உரிமை மீட்பு பயணம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில்,காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி தமிழகம் முழுவதும் திமுக,உட்பட 9 கட்சிகள் இன்று மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.சென்னை அண்ணா அறிவாலயம் முன்பு திமுக எம்.பி.கனிமொழி தலைமையில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. அதைபோல், புதுக்கோட்டையில் நடந்த போராட்டத்தில்,திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார்.
அண்ணா சாலையில் நடைபெற்ற போராட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் பங்கேற்றார்.வேலூரில் துரைமுருகன் தலைமையிலும்,தஞ்சையில் வைகோ தலைமையிலும் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.அதைபோல் திருச்சி,கோவை,மதுரை உள்ளிட்ட முக்கிய தலைநகரங்களில் இந்த போராட்டம் நடந்தது.