April 3, 2018
தண்டோரா குழு
காவிரி பிரச்னையில் அதிமுக அரசு எந்தளவுக்கு அழுத்தம் தந்தது என்பது மக்களுக்கு தெரியும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
‘காவிரி மேலாண்மை வாரியத்தை ஆறு வாரத்திற்குள் அமைக்க வேண்டும்’ என உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை மத்திய அரசு பின்பற்றவில்லை. இதனால், மத்திய அரசு மீது முதல்வர் பழனிசாமி தலைமையிலான, அ.தி.மு.க., அரசு உச்ச நீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது.
இந்நிலையில் மத்திய அரசை கண்டித்தும்,வாரியத்தை உடனடியாக அமைக்க வலியுறுத்தியும் அ.தி.மு.க., சார்பில் தமிழகம் முழுவதும் இன்று உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே இன்று நடைபெற்ற போராட்டத்தில் முதலமைச்சர் பழனிசாமி,துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர். மாலை உண்ணாவிரதம் முடிந்ததும் முதலமைச்சர் பழனிசாமி உரையாற்றினார்.
அப்போது பேசிய முதலமைச்சர் பழனிசாமி,
“காவிரி பிரச்னையில் விவசாயிகளுக்கு திமுக அநீதி இழைத்துள்ளது.காங்கிரஸ் கூட்டணி அரசில் இருந்தபோதே திமுக அழுத்தம் கொடுத்து காவிரி மேலாண்மை வாரியத்தை அமைத்திருக்கலாம். மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால், கூட்டணியில் இருந்து வெளியேறுவோம் என அப்போது திமுக கூறியிருந்தால், காவிரி பிரச்னை தீர்ந்திருக்கும். திமுக காவிரி ஒப்பந்தத்தை புதுப்பிக்க தவறி விவசாயிகளுக்கு துரோகம் செய்தது.
காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பை அமல்படுத்தவும் திமுக நடவடிக்கை எடுக்கவில்லை.காவிரி மேலாண்மை வாரியம், நீர் முறைப்படுத்தும் குழுவை அமைக்க வேண்டும் என்பதே அரசின் கோரிக்கையாகும்.காவிரி பிரச்னையில் அதிமுக அரசு எந்தளவுக்கு அழுத்தம் தந்தது என்பது மக்களுக்கு தெரியும்.காவிரி பிரச்னையில் மத்திய அரசுக்கு தமிழக அரசு சார்பிலும் அரசியல் ரீதியாகவும் அழுத்தம் கொடுத்து வருகிறோம்.காவிரி உரிமைக்காக போராடி வெற்றி பெறுவோம்”இவ்வாறு அவர் பேசினார்.