May 23, 2018
தண்டோரா குழு
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு விவகாரத்தில் காவல்துறை சீருடை அணிந்து வன்முறையை தூண்டும் வகையில் பேசியதாக சின்னத்திரை நடிகை நிலானி மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்.அப்போது போலீசாருக்கும், பொதுமக்களுக்கும் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது.போராட்டகாரர்களை காவல்துறையால் தடுக்க முடியாததால், ஆட்சியர் அலுவலக வளாகத்தில் போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.இந்த துப்பாக்கி சூட்டில் ஒரு பெண் உள்பட 11 பேர் பலியானார்கள். இதற்கு பலரும் கட்டணம் தெரிவித்தனர்.
இதையடுத்து,காவல்துறையின் இந்த செயலுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் சின்னத்திரை நடிகை நிலானி வீடியோ ஒன்றை வெளியிட்டார்.அந்த வீடியோவில் அவர் காவல்துறை சீருடை அணிந்திருந்த அவர் காவல் துறை சீருடையை அணிந்திருப்பது கேவலமாக இருக்கிறது. துப்பாக்கிச் சூடு தற்செயலானது இல்லை திட்டமிட்டு நடந்துள்ளது.இலங்கையில் நடந்தது தற்போது தமிழ்நாட்டில் நடந்துள்ளது என பேசியுள்ளார்.இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது.முதலில் ஒரு காவல் அதிகாரி இவ்வாறு பேசியிருப்பதாக சமூக வலைதளங்களில் தகவல் வெளியானது. ஆனால் பின்னர் தான் பேசியது காவல் அதிகாரி இல்லை, நடிகை என்பது தெரியவந்தது.
இதனை அடுத்து அவரது பேச்சு வன்முறையைத் தூண்டும் வகையில் இருப்பதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் ஆள்மாறாட்டம்,காவல்துறைக்கு களங்கம் ஏற்படுத்துதல்,வன்முறையைத் தூண்டும் வகையில் பேசுதல், தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தவறான கருத்துக்களை பரப்புதல் உள்ளிட்ட 4 பிரிவுகளில் நிலானி மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.