November 30, 2020
தண்டோரா குழு
கோவை துடியலூரில் மளிகை கடையிலிருந்து 10 லட்சம் மதிப்பிலான பொருட்களை நள்ளிரவில் மர்ம நபர்கள் எடுத்து சென்றது தொடர்பாக நடவடிக்கை எடுக்காத காவல்துறையினர் மீது நடவடிக்கை கோரி இளம்பெண் கண்ணீருடன் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார்.
கோவை துடியலூர் அடுத்த ஸ்ரீ முருகன் நகர் பகுதியை சேர்ந்தவர் ஜெயஸ்ரீ(26). அதே பகுதியில் புவனேஷ்வரி என்பவருக்கு சொந்தமான கடையில் ஒப்பந்த அடிப்படையில், ஜெயஸ்ரீ மளிகை கடை வைத்து நடத்தி வந்துள்ளார்.இதற்கிடையே புவனேஷ்வரி கடைக்கு அதிக வாடகை கேட்டதாக கூறப்படுகின்றது. இதனால், கருத்து வேறுபாடு ஏற்பட்டு ஜெயஸ்ரீயின் தாயார் லட்சுமி இதுதொடர்பாக, நீதிமன்றத்தில் புவனேஷ்வரி மீது வழக்கு போட்டுள்ளார்.
இந்த வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், கடந்த 2 ந்தேதி மற்றும், 3 ந்தேதி அடியாட்கள் மூலம் மிரட்டப்பட்டதாகவும்,இதுதொடர்பாக, துடியலூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்க வில்லை.தொடர்ந்து 5 ந்தேதி அதிகாலையில் மர்ம நபர்கள் கடையின் பூட்டை உடைத்து உள்ளே இருந்த மளிகை பொருட்கள், பிரிஜ், சுடிதார் துணிகள் என 10 லட்சம் மதிப்பிலான பொருட்களை திருடி சென்றனர். இதுதொடர்பாக சிசிடிவி காட்சிகளையும் காவல்துறையினரிடம் அளித்தும் நடவடிக்கை எடுக்க வில்லை.எனவே நடவடிக்கை கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க வந்துள்ளதாகவும், மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வில்லை என்றால் தற்கொலை செய்வது தவிர வேறு வழியில்லை என கண்ணீர் மல்க ஜெயஸ்ரீ கூறினார்.