April 11, 2018
தண்டோரா குழு
காவலர்கள் மீது கை வைப்பவர்களை தண்டிக்க கடுமையான சட்டம் இயற்ற வேண்டும் என ரஜினிகாந்த் கூறியுள்ளார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி தமிழகத்தில் தொடர்ந்து போராட்டங்கள் நடந்து வருகிறது.இதன் ஒரு பகுதியாக நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டி நடக்கக்கூடாது என்று கடும் எதிர்ப்பு கிளம்பியது.சென்னை சேப்பாக்கம் மைதானத்திலும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் கடும் போராட்டம் நடைபெற்றது.இருப்பினும் தடைகளை மீறி நேற்று சென்னையில் ஐபிஎல் நடைபெற்றது.இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்பினர் விளையாட்டு மைதானத்தை போராட்டக்களமாக மாற்றினர்.
அப்போது போராட்டக்காரர்களை அப்புறப்படுத்தத் தடியடி நடத்தப்பட்டது.இந்தச் சம்பத்தில், இளைஞர் ஒருவர் காவலரை கடுமையாகத் தாக்கியுள்ளார்.இது தொடர்பான வீடியோ காட்சியை பார்த்த ரஜினிகாந்த்,இந்தச் செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர்,
“வன்முறையின் உச்சகட்டமே சீருடையில் பணிபுரியும் காவலர்கள் தாக்கப்படுவது தான்.இத்தகைய வன்முறை கலாச்சாரத்தை உடனே கிள்ளி எறியவில்லை என்றால் நாட்டுக்கே பேராபத்து.சீருடையில் இருக்கும் காவலர்கள் மீது கை வைப்பவர்களை தண்டிக்க இன்னும் கடுமையான சட்டங்களை நாம் இயற்ற வேண்டும்” என கூறியுள்ளார்.