February 10, 2021
தண்டோரா குழு
கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சுமார் 6 ஆயரத்திற்கும் மேற்பட்ட பதிவு பெற்ற சாலையோர வியாபாரிகள் உள்ளனர். பதிவு பெறாமல் சுமார் 12 ஆயிரம் சாலையோர வியாபாரிகள் உள்ளனர். கொரோனா ஊரடங்கு காரணமாக சாலையோரம் மற்றும் நடைபாதை வியாபாரிகள் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டது.
இதனிடையே சாலையோர வியாபாரிகளுக்கு ரூ.10 ஆயிரம் சிறப்பு கடன் வழங்கப்படும் என மத்திய அரசால் அறிவிக்கப்பட்டது. இதற்காக மாநகராட்சி சார்பாக முகாம்கள் அமைக்கப்பட்டு ஆவணங்கள் பெறப்பட்டு அதனை இணையதளம் மூலம் பதிவேற்றம் செய்யப்பட்டு வங்கி கடன்கள் பெற ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்கான முகாம்கள் மாநகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் நடந்தது. ஆயிரக்கணக்கான சாலையோர வியாபாரிகள் இந்த முகாம்களில் கலந்துக்கொண்டு தங்களிடம் உள்ள ஆவணங்களை சமர்பித்தனர்.
இதனிடையே சாலையோர வியாபாரிகளுக்கு மாநகராட்சி சார்பாக வழங்கப்பட்ட அடையாள அட்டை இன்னமும் புதுபிக்கப்படவில்லை. இதனால் வங்கிகளில் கடன் தரவும் மறுக்கப்படுகிறது என வியாபாரிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து கோவை மாவட்ட சாலையோர மற்றும் நடைபாதை வியாபாரிகள் நலச்சங்கம் தலைவர் மணி கூறுகையில்,
‘‘சில வங்கிகளில் சாலையோர வியாபாரிகளுக்கான அடையாள அட்டை காலவதியாகிவிட்டது புதிய அட்டையுடன் வாருங்கள் என்கின்றனர். மாநகராட்சி சார்பாக புதிய அட்டைகள் இன்னமும் வழங்கப்படவில்லை. எனவே சாலையோர வியாபாரிகளுக்கு புதிய அட்டைகள் வழங்கப்பட வேண்டும். கொரோனா கால சிறப்பு கடனை பெற்று தர மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். வங்கிகள் சார்பாக சிறப்பு முகாம்கள் நடத்தப்பட வேண்டும்,’’ என்றார்.