December 9, 2020
தண்டோரா குழு
கோவையிலிருந்து கார் மூலம் கேரளாவிற்கு ரேசன் அரிசி கடத்த முயன்ற மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கோவையிலிருந்து கேரளாவிற்கு ரேசன் அரிசி கடத்தப்படுவதாக உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து உணவுப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு பறக்கும் படை தாசில்தார் சிவக்குமார் தலைமையில், தனி வருவாய் ஆய்வாளர் குமார் மற்றும் வனத்துறையினர் ஆனைக்கட்டி சோதனைச்சாவடியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது கேரளா நோக்கி வந்த டாடா சுமோ வாகனத்தை தடுத்து நிறுத்திய அதிகாரிகள் உள்ளே ஆய்வு மேற்கொண்ட போது அதில் சிறு சிறு மூட்டைகளாக ரேசன் அரிசி பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து காரில் வந்தவர்களை விசாரித்த போது பாலக்காடு மாவட்டத்தை சேர்ந்த ஆனந்தகுமார் , அன்னூரை சேர்ந்த பிரகாஷ், பொள்ளாச்சியை சேர்ந்த ரமேஷ் என்பது தெரியவந்தது.
கோவையில் பல்வேறு பகுதிகளில் சேகரித்த ரேசன் அரிசியை கேரளாவிற்கு விற்பனைக்கு கடத்த முயன்றதும் தெரியவந்தது. இதையடுத்து குடிமைப்பொருள் கடத்தல் புலனாய்வுத்துறை போலீஸார் மூவரையும் கைது செய்தனர். மேலும் காரில் கடத்தி வந்த சுமார் 500 கிலோ ரேசன் அரிசியை பறிமுதல் செய்தனர்.