May 18, 2021
தண்டோரா குழு
கொரோனா தொற்று பரவலை கட்டுபடுத்துவதில் அரசின் விதிமுறைப்படி,வேண்டுமானால் காய்கறி மார்க்கெட்டுகளுக்கு விடுமுறை அளிக்கவும் தயாராக இருப்பதாக கோவை டி.கே.மார்க்கெட் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
கொரோனா இரண்டாவது அலை கோரத்தாண்டவமாடி வரும் நிலையில்,24 ம்தேதி வரை முழுஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதில் மளிகை,காய்கறி மற்றும் அத்தியாவசிய தேவைகளுக்கென காலை ஆறு மணி முதல் பத்து மணி வரை கடைகள் இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இதிலும் பொதுமக்கள் கூட்டமாக சமூக விலகலை பின்பற்றாமல் இருப்பதால் நோய் தொற்று அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள டி.கே.மார்க்கெட் மொத்த காய்கறி விற்பனை நடைபெறும் இடத்தை கோவை மாநகராட்சி மத்திய மண்டல உதவி ஆணையர் சிவசுப்ரமணியம் ஆய்வு செய்து,வியாபாரிகள் மற்றும் பொதுமக்களுக்கு முக கவசங்கள் அணிவது மற்றும் சமூக விலகலை கடைபிடிக்க அறிவுறுத்தினார்.
இதனை தொடர்ந்து கோவை டி.கே.மார்க்கெட் காய்கனி மொத்த வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் ராஜேந்திரன் செய்தியாளர்களிடம் பேசுகையில்,மார்க்கெட்டிற்கு காய்கறிகள் வாங்க வரும் பொதுமக்கள் முக கவசங்கள் இல்லாமல் உள்ளே அனுமதிப்பதில்லை எனவும்,குறிப்பாக குழந்தைகள் மற்றும் சிறுவர்களை மார்க்கெட்டிற்கு அழைத்து வர தடை விதித்துள்ளதாக கூறினார்.தொடர்ந்து அவர்,கொரோனா பரவலை கட்டுபடுத்துவதில் அரசு கேட்டு கொண்டால் மார்க்கெட்டில் உள்ள கடைகளுக்கு விடுமுறை அளிக்கவும் தயாராக இருப்பதாக அவர் தெரிவித்தார்.