May 17, 2018
தண்டோரா குழு
பாகிஸ்தானில் காதலித்த பெண்ணை தான் திருமணம் செய்யப் போவதாக கூறிய இளைஞரின் கண்கள் தோண்டி எடுக்கப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள நசீராபாத் பகுதியை சேர்ந்தவர் தோஸ்த் முகமது (70),இவரது இளையமகன் அப்துல் பாகி (22) . இவர் ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார். தான் காதலித்த வந்த பெண்ணை திருமணம் செய்து கொள்ளவுள்ளதாக தனது பெற்றோர் மற்றும் சகோதரர்களிடம் கூறியுள்ளார்.இதற்கு வீட்டில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. ஆனால் பாகி தான் காதலித்த பெண்ணை திருமணம் செய்யப்போவதாக ஒற்றை காலில் நின்று உள்ளார்.
இதனால் ஒருகட்டத்தில் வாக்குவாதம் முற்றிதிடீரென தந்தை மற்றும் சகோதரர்கள் என 5 பேரும் அப்துல் பாகி மீது சரமாரியாக தாக்குதல் நடத்தினர். பின்னர், பாகியின் தந்தையும், சகோதரர்களும், அவரை அறைக்கு தூக்கி சென்று கட்டிலில் கட்டிவைத்து, உணவருந்தும் கரண்டியால் கண்ணை தோண்டி எடுத்தனர்.
இச்சம்பவங்களை பார்த்து அதிர்ச்சியடைந்த அப்துல் பாகியின் தாய் தடுக்க முற்பட்டுள்ளார். ஆனால் அவரை ஒரு அறையில் வைத்து பூட்டி விட்டனர். சத்தம் கேட்டு திரண்ட அக்கம் பக்கத்தை சேர்ந்தவர்கள் அப்துல் பாகியை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.தற்போது அப்துல் பாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தந்தை மற்றும் சகோதரர்களை போலீசார் கைது செய்தனர்.
காதலுக்கு கண் இல்லை என்பார்கள். இங்கு காதலுக்காக கண்ணையே எடுத்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.