June 3, 2021
தண்டோரா குழு
கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலத்திற்குட்பட்ட 68 வார்டு பகுதி, ராமநாதபுரம் ரோடு மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் பொது மக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்படும் பணிகள் நடைபெற்றது. இதனை மாநகராட்சி கமிஷனர் குமாரவேல் பாண்டியன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது அவர்,பொதுமக்கள் போதிய சமூக இடைவெளியை கடைபிடித்து தடுப்பூசி போட்டுக் கொள்ளுமாறு அறிவுறுத்தினார். பின்னர் கஸ்தூரி காந்திநகர் பகுதியில் தனியார் இருசக்கர வாகன பழுதுபார்க்கும் கடையினை திறந்து வைத்து கடையின் முன்பு கூட்டமாக அமர்ந்திருந்த நபர்களிடம் கடையினை பூட்டுமாறு அவர் உத்தரவிட்டார்.
அதே போல் அப்பகுதியில் நின்று கொண்டிருந்த கோவிட் கேர் சிறப்பு கார் ஆம்புலன்ஸ் ஓட்டுநரிடம் தினசரி எந்தெந்த பகுதிகளுக்கு செல்கிறீர்கள்?தினசரி எத்தனை நபர்கள் மருத்துவமனைக்கு அழைத்து செல்கிறீர்கள் என மாநகராட்சி கமிஷனர் அவர்கள் கேட்டறிந்தார்.
அதனைத் தொடர்ந்து கோவை மாநகராட்சி அலுவலகத்தில் கொரோனா தடுப்பு பணிக்கென 100 தற்காலிக செவிலியர்கள் பணிக்கான நேர்காணலில் கலந்து கொள்ள வந்திருந்த செவிலியர்களிடம் களப்பணியில் ஈடுபடும்போது தகுந்த பாதுகாப்புடன் நடந்துகொள்ள வேண்டும் என அறிவுரை வழங்கினார்கள்.
இந்த ஆய்வின்போது செயற்பொறியாளர் ரவிச்சந்திரன், மண்டல சுகாதார அலுவலர், சுகாதார ஆய்வாளர்கள், சுகாதார மேற்பார்வையாளர்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.