March 30, 2018
தண்டோரா குழு
திமுக தலைவர் கருணாநிதி மற்றும் ஸ்டாலினை சந்திக்க மேற்குவங்க முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி ஏப்ரல் 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் சென்னை வர உள்ளார்.
திரிபுரா, மேகாலயா, நாகாலாந்து மாநில தேர்தல் முடிவுகளை தொடர்ந்து அகில இந்திய அளவில் 3வது அணி அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்று வருகிறது. பாரதிய ஜனதா மற்றும் காங்கிரஸ் அல்லாத 3-வது அணி அமைக்க தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஆகியோர் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்காக சமீபத்தில் டெல்லியில் பல்வேறு கட்சி தலைவர்களுடன் மம்தா பானர்ஜி ஆலோசனை நடத்தினார். இந்நிலையில் ஏப்ரல் 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் மம்தா பானர்ஜி சென்னைக்கு வர உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மூன்றாவது அணியில் சேர ஏற்கனவே திமுக-விற்கு அழைப்பு விடுத்துள்ள மம்தாவின் சென்னை வருகை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
இதற்கிடையில், சென்னை வரும் மம்தா பானர்ஜி தி.மு.க தலைவர் கருணாநிதியை நேரில் சந்தித்து நலம் விசாரிப்பார் என்றும், தி.மு.க செயல் தலைவர் மு.க ஸ்டாலினுடன் அரசியல் நிலவரம் குறித்து ஆலோசனை நடத்துவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.