March 8, 2018
தண்டோரா குழு
திருச்சி திருபெறும்பூரில் கர்ப்பிணியை காலால் உதைத்துக் கொன்ற போக்குவரத்து ஆய்வாளர் காமராஜ் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
திருச்சி திருவெறும்பூர் கணேஷா ரவுண்டானா பகுதியில் திருவெறும்பூர் போலீஸார் ஹெல்மெட் சோதனையில் நேற்று இரவு 7.30 மணியளவில் ஈடுபட்டனர். அப்போது, தஞ்சாவூர் மாவட்டம் பாபனாசம், சூலமங்கலம் புதுத்தெருவை சேர்ந்த தம்பதியர் ராஜா (என்ற) தர்மராஜ், உஷா (30) ஆகியோர் இருசக்கர வாகனத்தில் வந்தனர். உஷா 3 மாத காப்பிணி. போலீஸார் கைகாட்டி நிறுத்தாததால், மற்றொரு வாகனத்தில் காவல் ஆய்வாளர் காமராஜ் துரத்தி சென்று, தம்பதியர் சென்ற வாகனத்தை எட்டி உதைத்ததாக கூறப்படுகிறது. இதில், தம்பதியர் நிலை தடுமாறி சாலையில் விழுந்தனர். பின்னால் வந்த வேன் ஏறியதில் 3 மாத கர்ப்பிணியான உஷா சம்பவ இடத்திலேயே இறந்தார். இந்த சம்பவத்தை கண்டித்து நேற்று இரவு சுமார் 3000ம் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர்.
இதனையடுத்து, இதற்கு காரணமான இன்ஸ்பெக்டர் காமராஜ் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.இந்நிலையில், அவரை சஸ்பெண்ட் செய்து, மத்திய மண்டல ஐ.ஜி., வரதராஜூலு உத்தரவிட்டுள்ளார். மேலும், உயிரிழந்த கர்ப்பிணி பெண் உஷாவின் உடல்அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. ஆனால், காமராஜை பணி நீக்கம் செய்ய வேண்டும் எனக்கூறி அவரது உறவினர்கள் உடலை வாங்க மறுத்து போராட்டம் நடத்தினர். இதனால், அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.