May 19, 2018
தண்டோரா குழு
கர்நாடகாவில் ஆட்சி அமைக்க ஆளுநர் வஜூபாய் வாலா அழைப்பு விடுத்துள்ளார் என குமாரசாமி கூறியுள்ளார்.வரும் 21-ம் தேதி திங்கட்கிழமையன்று முதல்வராக பதவியேற்க்கவுள்ளார்.
கர்நாடகாவில் மொத்தம் உள்ள 224 தொகுதிகளில் இரண்டு தொகுதி தவிர, மற்ற 222 இடங்களுக்கு கடந்த 12ம் தேதி தேர்தல் நடந்தது. வாக்கு எண்ணிக்கை கடந்த 15ம் தேதி நடந்தது. இதில், எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. பாஜ 104 இடங்களை பிடித்து தனிப்பெரும் கட்சியாக வந்தது. ஆளும் காங்கிரஸ் கட்சிக்கு 78 இடங்கள் மட்டுமே கிடைத்தது. மதச்சார்பற்ற ஜனதா தளத்துக்கு 38 இடங்களிலும், இதர கட்சிகளுக்கு 3 இடங்களிலும் வெற்றி பெற்றன.
இதனால், தனிப் பெரும் கட்சி என்ற வகையில் ஆட்சியமைக்க பாஜ சார்பில் எடியூரப்பா உரிமை கோரினார். அதேசமயம், காங்கிரஸ் – மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணி அமைத்து ஆளுநர் வாஜுபாய் வாலாவிடம் ஆட்சியமைக்க உரிமை கோரின. நீண்ட இழுபறிக்கு பிறகு, பாஜ.வை ஆட்சியமைக்க ஆளுநர் வஜுபாய் வாலா அழைப்பு விடுத்தார். இதையடுத்து, கர்நாடக முதல்வராக எடியூரப்பா பதவியேற்றார். மேலும், 15 நாட்களில் பெரும்பான்மையை நிரூபிக்கும்படி எடியூரப்பாவுக்கு ஆளுநர் உத்தரவிட்டார்.
இதற்கிடையில், ஆளுநரின் முடிவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் காங்கிரசும், மஜத.வும் அவசர வழக்கு தாக்கல் செய்தது. அவ்வழக்கில் இன்று எடியூரப்பா நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து, இன்று காலை கர்நாடகாவில் சட்டப்பேரவை கூட்டப்பட்டு MLA-க்கள் உறுதிமொழி எடுத்தனர். மாலை 3.30 மணிக்கு பேரவை மீண்டும் கூடிய போது உரையாற்றி எடியூரப்பா, முதல்வர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். அவரை ராஜினாமா ஆளுநரும் ஏற்றுக் கொண்டார். பின்னர் மீண்டும் கர்நாடக ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க குமாரசாமி உரிமை கோரினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
பாஜகவால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியவில்லை. ஆபரேஷன் தாமரைக்கும் நாங்கள் தயாராக உள்ளோம். நிலையான ஆட்சியைத் தருவோம் என்ற நம்பிக்கை உள்ளது. எங்கள் எம்எல்ஏக்களைப் பாதுகாக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்தோம். இன்று இரவு 8.30 மணிக்கு காங்கிரஸ், ம.ஜ.த. ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது. நீதித்துறையையும், அதன் முடிவையும் தனிப்பட்ட முறையில் பாராட்டுகிறேன். திங்களன்று காங்கிரஸ், ம.ஜ.த. கூட்டணியை ஆட்சியமைக்க வருமாறு ஆளுநர் அழைப்பு விடுத்துள்ளார். பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் 15 நாட்கள் அவகாசம் அளித்துள்ளார். கந்தீரவா ஸ்டேடியத்தில் திங்களன்று முதலமைச்சராகப் பதவியேற்கவுள்ளேன். மே 21ஆம் தேதி நான் முதல்வராக பதவியேற்கும் விழாவில் பங்கேற்க சோனியா, ராகுல் காந்திக்கு அழைப்பு விடுத்துள்ளேன் எனக் கூறினார்.