March 9, 2020
தண்டோரா குழு
கரோனோ வைரஸ் காரணமாக எகிப்து நாட்டில் நைல் நதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ஏ சாரா என்ற கப்பலில் தமிழ்நாட்டை சேர்ந்த 17 பேர் கப்பலில் சிக்கி தவித்து வருகின்றனர்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி பகுதியை சேர்ந்தவர் வனிதா ரங்கராஜ். இவர் அப்பகுதியில் சரணாலாயம் என்ற அனாதைகள் இல்லம் நடத்தி வருகிறார். இவர் தனது கணவர் ரங்கராஜ் உடன் கடந்த பிப்ரவரி 27 ம் தேதி எகிப்து நாட்டிற்கு சுற்றுலா சென்றுள்ளார். சேலத்தை சேர்ந்த கிராண்ட் ராயல் டூர்ஸ் என்ற நிறுவனம் இவர்களோடு சேர்த்து கோவை, சேலம், சென்னை உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 18 பேரை சுற்றுலா அழைத்து சென்றுள்ளது. எகிப்தில் சுற்றுலா சென்றவர்கள் ஏ சாரா என்ற கப்பலில் நைல் நதிக்கு சென்றுள்ளனர். அப்போது அக்கப்பலில் இருந்த வெளிநாட்டவர்கள் பலருக்கு கரோனோ பாதிப்பு இருந்தது தெரியவந்தது. சென்னையை சேர்ந்த ஒருவருக்கும் கரோனோ சந்தேகம் காரணமாக மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இதையடுத்து லக்ஷர் என்ற நகரத்திற்கு அருகே நைல் நதியில் கப்பல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 14 நாட்கள் மருத்துவ கண்காணிப்பிற்காக கப்பலில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதனால் மார்ச் 7 ம் தேதியே நாடு திரும்ப வேண்டியவர்கள், நைல் நதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள கப்பலில் சிக்கி தவித்து வருகின்றனர். கப்பலில் சிக்கி தவிப்பவர்களை உடனடியாக மீட்டு சொந்த ஊர்களுக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளனர்.