August 3, 2018
தண்டோரா குழு
தமிழகத்தின் கரும்பு விவசாயிகளைக் காப்பாற்றுவதற்காக பிரதமர் தனிப்பட்ட அக்கறை எடுத்துக்கொண்டிருக்கிறார் என பா.ஜ.க மாநில பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.
வட மாநிலங்களுக்கு இணையாக சர்க்கரை உற்பத்தி செய்த தமிழகத்தில் இப்போது கரும்பு சாகுபடி இதுவரை இல்லாத வகையில் குறைந்திருக்கிறது. தமிழகத்தில் நிலவிய வறட்சி காரணமாக, கரும்பு பயிரிடும் பரப்பளவு, 2016 அக்., – 2017 செப்., வரையிலான, சர்க்கரை ஆண்டில், வெகுவாக குறைந்துள்ளது. தமிழகத்தில், கரும்பு சாகுபடி பரப்பு தொடர்ந்து குறைந்து வருகிறது. 10 ஆண்டுகளுக்கு முன், ஒன்பது லட்சம் ஏக்கராக இருந்த சாகுபடி, தற்போது, ஐந்து லட்சம் ஏக்கராக குறைந்து விட்டது. பல மாவட்டங்களில், வடகிழக்கு பருவமழை பொய்த்ததாலும் கரும்பு சாகுபடி பரப்பு குறைந்துவிட்டது. தமிழகத்தில் கரும்பு உற்பத்தி செய்யும் விவசாயிகளும், அதை நம்பி இருக்கும் சர்க்கரை ஆலை நிர்வாகிகளும் கடந்த சில ஆண்டுகளாக பெரும் நெருக்கடியைச் சந்தித்து வருகின்றனர். கரும்பில் இருந்து சர்க்கரை உற்பத்தி செய்யும் 25 தனியார் ஆலைகளும் 18 கூட்டுறவு மற்றும் பொதுத்துறை ஆலைகளும் கரும்பு உற்பத்தியையே நம்பியுள்ளன. ஆனால், இவை இந்த ஆண்டு தங்களது உற்பத்தி திறனில் 21 சதவீதம் மட்டுமே சர்க்கரை உற்பத்தி செய்திருப்பது இந்த துறையை நம்பியிருக்கும் அனைவரையும் கவலையில் ஆழ்த்தியுள்ளது.
இந்நிலையில், கரும்பு விசாயிகள் பிரச்சனைகள் தொடர்பாக தமிழக பா.ஜ.க மாநில பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன், கடந்த திங்கள்கிழமை பிரதமர் மோடியை சந்தித்துள்ளார்.இந்த சந்திப்பின் போது, பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், சர்க்கரை ஆலை நிர்வாகிகள்
ஆகியோர் உடனிருந்தனர்.
இந்த சந்திப்பு குறித்து வானதி ஸ்ரீனிவாசன் தனது ட்விட்டர் பக்கத்தில்,
“தமிழகத்தில் மட்டும் ஐந்து லட்சம் விவசாயக் குடும்பங்கள், ஒரு லட்சம் தொழிலாளர்கள் கரும்பு விவசாயத்தை நம்பி இருக்கிறார்கள். தமிழகத்தில் கடந்த 4 நான்கு வருடங்களாக ஏற்பட்ட கடும் வறட்சி காரணமாக, 20 சதவிகிதமே சர்க்கரை உற்பத்தி நடைபெற்றுள்ளது. தொடர்ச்சியாக சர்க்கரை ஆலைகள் மூடப்படும் நிலையை மாற்றுவதற்காக எடுத்த முயற்சிகள் பிரதமரின் நேரடிப் பார்வைக்கு எடுத்துச் செல்லப்பட்டது. உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிரா மாநில அதீத உற்பத்தி மற்றும் அவர்களின் நீர் வளம் இவற்றை தமிழகத்தோடு ஒப்பிட்டுப் பார்த்து, தமிழகத்தின் கரும்பு விவசாயிகளைக் காப்பாற்றுவதற்காக பிரதமர் தனிப்பட்ட அக்கறை எடுத்துக்கொண்டிருக்கிறார்” எனப் பதிவிட்டுள்ளார்.
இது குறித்து தென்னிந்திய சர்க்கரை ஆலை உரிமையாளர்கள் சங்க தலைவர் பழனிசாமி கூறுகையில்,
போதுமான கரும்பு உற்பத்தி இல்லை, உரிய விலை இல்லை, சர்க்கரை உற்பத்தி விலை அதிகரித்துள்ளது, விவசாயிகளுக்கு பணம் தர முடியவில்லை, வங்கிக் கடனை அடைக்க முடியவில்லை இது போன்ற பிரச்னைகள் காரணமாக சர்க்கரை ஆலைகள் பெரும் நெருக்கடியை சந்தித்து வருகின்றன. இதனால், 5 லட்சம் நேரடி விவசாயிகளும், ஒரு லட்சம் மறைமுக பணியாளர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக எங்களுக்கு உதவ வேண்டும் என பிரதமர் மோடியை சந்தித்து கோரிக்கை வைத்துள்ளோம். எனினும், மத்திய, மாநில அரசும் இணைந்து விரைவில் நல்ல முடிவை அறிவிப்பார்கள் என நம்புகிறோம் எனக் கூறியுள்ளார்