August 6, 2018
தண்டோரா குழு
திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை சவாலான நிலைக்கு சென்றுவிட்டது என காவிரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.
திமுக தலைவர் கருணாநிதி உடல்நலக்குறைவு காரணமாக கடந்த சில மாதங்களாக மருத்துவ கண்காணிப்பில் இருந்து வந்தார். இதற்கிடையில்,கடந்த ஜூலை 27-ம் தேதி இரவு கருணாநிதிக்கு ரத்த அழுத்தக் குறைவு ஏற்பட்டதால் நள்ளிரவில் காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து, பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் அவரது உடல் நலம் குறித்து விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில், காவிரி மருத்துவமனையில் தொடர்ந்து, 10 வது நாளாக சிகிச்சை பெற்று வரும் கருணாநிதி உடல் நிலையில் இன்று திடீர் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால், இன்று காலை முதல் திமுக செயல் தலைவர் ஸ்டாலின், எம்.பி., கனிமொழி, முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, முதன்முறையாக கருணாநிதியின் மனைவி தயாளு மற்றும் துணைவி ராஜாத்தி ஆகியோர் வந்துள்ளனர்.இந்த செய்தியை அறிந்த திமுக தொண்டர்களும் மருத்துவமனையில் குவிந்து வருகின்றனர்.
இந்நிலையில் கருணாநிதியில் உடல்நிலை குறித்து காவிரி மருத்துவமனை 5 வது முறையாக அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதில், வயது மூப்பு காரணமாக உறுப்பு செயல்பாட்டில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது உடலில் உள்ள முக்கிய உறுப்புகளை செயல்பட வைப்பது சவாலாக உள்ளது. அடுத்த 24 மணி நேரத்திற்கு பின்பே கருணாநிதி உடல்நிலை குறித்து தெரியவரும் என தெரிவித்துள்ளது.