February 20, 2018
தண்டோரா குழு
மதுரையில் நாளை நடைபெறவுள்ள கமல்ஹாசனின் முதல் அரசியல் பொதுக்கூட்டத்தில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் பங்கேற்கவுள்ளார்.
நடிகர் கமல்ஹாசன் நாளை தனது அரசியல்கட்சியின் பெயர், கொடியை அறிமுகம் செய்யவுள்ளார். இதற்காக கடந்த சில நாட்களாக ரஜினி, கருணாநிதி, விஜயகாந்த் என பலரையும் கமல் சந்தித்து வருகிறார். இதற்கிடையில், அரசியல் கட்சி தொடர்பான அறிவிப்புக்கு முன்னரே கமல்ஹாசன் மம்தா பானர்ஜி, அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் பினராயி விஜயன் ஆகியோரை சந்தித்தார்.
இந்நிலையில், நாளை மதுரையில் நடைபெறவுள்ள பொதுக்கூட்டத்தில் பங்கேற்க மூவருக்கும் கமல் அழைப்பு விடுத்ததாகவும், அதன் அடிப்படையில் அரவிந்த் கெஜ்ரிவால் பங்கேற்பதும் உறுதியாகியுள்ளது.
எனினும்,கமல்ஹாசனின் பொதுக்கூட்டத்தில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி ஆகியோர் பங்கேற்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.